இமாச்சல் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மண்டி மாவட்டம், குலு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, பாறை சரிந்து வாகனத்தின் மீது விழுந்து இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்காக சில வாகனங்கள் அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு, மேடான பகுதியிலிருந்துபாறை சரிந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது விழுந்தது. இதில், லாரியில் இருந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து, காவல் கண்காணிப்பாளர் குருதேவ் சந்த சர்மா கூறுகையில், "தொடர் மழையால் மண்ணில் இருந்த ஈரப்பதம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்குவதற்காக இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சில மணி நேரத்திலேயே நிலச்சரிவு ஏற்பட்டு வாகனங்கள் மீது பாறை விழுந்தது" என்றார்.
இதற்கிடையில், கடும் மழை காரணமாக குலு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், சைனி-லார்ஜி மாநில நெஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நெஞ்சாலை வழியாகவே 15 கிராமங்களுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மூணாறு நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 56ஆக உயர்வு!