அமராவதி: கர்னூல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை தற்கொலைக்குத் தூண்டியதாக சரக காவல் ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோர் ஆந்திர காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட சரக ஆய்வாளர் சோமசேகர் ரெட்டி, தலைமைக் காவலர் கங்காதர் ஆகியோர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்), பிரிவு 323 (தாமாக முன்வந்து காயப்படுத்துதல்), 324 (தாமாக முன்வந்து பயங்கர ஆயுதங்களால் காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நந்தியால் நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, அவர் காவல் துறை உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே காவலர்கள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஷேக் அப்துல் சலாம் (45), அவரது மனைவி நூர்ஜகான் (43), மகன் டாடா கலந்தர் (09), மகள் சல்மா (14) ஆகியோர் கடந்த நான்காம் தேதி பன்யம் மண்டலத்தில் உள்ள கவுலூரு ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
முன்னதாக சலாம் ஒரு செல்ஃபி வீடியோவில், தாங்கள் காவல் துறையினரின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டோம் என்றும், நந்தியான் ஐ டவுன் காவலர்கள் தங்கள் மீது தவறான வழக்கைப் புனைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இதிலிருந்த தங்களை மீட்க யாரும் முன்வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதனால் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக கூறியிருந்தார்.