சாத்தான்குளத்தில் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் சிறையில் அடைக்கப்பட்டு, மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்திவருகிறார். இந்நிலையில், நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குமார், காவல் துணைகண்காணிப்பாளர் பிராதபன் ஆகியோரை இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதித்துறை நடுவரை ஒருமையில், மரியாதைக் குறைவாக, ஏளனமாகப் பேசியதாக காவலர் மகாராஜனை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக தாக்கல் செய்தது.
நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது மூவரும் நேரில் ஆஜராகினர். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நெல்லை சரக ஐஜி பிரவீன் குமார், தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் ஆகியோர் அரசு வழக்குரைஞருடன் வந்திருந்தனர்.
அரசுத்தரப்பில் நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத குமார், பிரதாபன் ஆகியோர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதித்துறை நடுவரை மரியாதைக்குறைவாகப் பேசிய காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த 24 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
நீதிபதிகள், நீதித்துறை நடுவரின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் மீதான நீதிமன்ற குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை தொடரும். தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். அரசுத்தரப்பில் அவர்கள் செய்தது தவறு இருப்பினும், அதிக மன அழுத்தம் காரணமாகவே நிகழ்வு நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.