சம்பள உயர்வு, போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்வைத்து தெலங்கானா போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பண்டிகை காலம் என்பதால் தெலங்கானாவில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் சிரமப்படுவர் என்பதால், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வேலைக்குத் திரும்புமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோபமடைந்த முதலமைச்சர் சந்திர சேகர ராவ், கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கினார். இதையடுத்து போக்குவரத்து கழகத்தினர் தீவிர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத் தலைவர் கமல் ரெட்டி பேசுகையில், ’50 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். எங்களது கோரிக்கைகளை செப்.3ஆம் தேதியே அரசிடம் கொடுத்தோம். ஆனால் இதுவரை அரசு சார்பாக எவ்வித பேச்சுவார்த்தையும் எங்களுடன் நடத்தப்படவில்லை’ என்றார்.
இதேபோல் கடந்த ஆண்டு தமிழ்நாட்டிலும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை வரை போராட்டம் நடைபெற்றதில் மக்கள் பெரும்பாதிப்படைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: 'தொழிற்சங்கம் சாராத புதியவர்களுக்கு வாய்ப்பு' - தெலங்கானா முதலமைச்சர் அதிரடி