ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான நடவடிக்கைகளுடன் கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைதராபாத், ரெங்காரெட்டி, விகராபாத், மெட்செல், சங்கரெட்டி மாவட்டங்களிலுள்ள 50 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்படும். கரோனா தொற்று சோதனைகளை நடத்துவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களுக்கான வழிகாட்டுதல்களைத் தயாரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தெலங்கானா முதலமைச்சர் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை இன்று நடத்தினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நம் மாநிலத்தில் வைரஸ் பரவும் விகிதம் குறைவு என்று அலுவலர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், இறப்பு விகிதம் குறைந்துவருவதாகவும், கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மாநிலத்தின் மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது, கரோனா வழக்குகளின் எண்ணிக்கை ஹைதராபாத், ரெங்காரெட்டி, மெட்செல் மாவட்டங்களில் அதிகமாகவுள்ளதெனவும் அதைத் தொடர்ந்து சங்கரெட்டி, விகராபாத் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தினார்.
மேலும், "ஹைதராபாத் தெலங்கானா மாநிலத்தின் இதயம் போன்றது. இது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம். இது நாட்டின் பெருநகரங்களில் ஒன்றாகும். மக்களின் ஆரோக்கியம், நகரத்தின் வளர்ச்சி ஆகியவற்றை நிரந்தர அடிப்படையில் பராமரிக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் உள்ள ஒரு பொறுப்பு. கரோனா வைரஸின் பரவல் மாநிலத்தில் குறைவாக இருந்தாலும், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த பத்து நாள்களில், ஹைதராபாத், அதனைச்சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு சோதனை நடத்துங்கள். இதற்காக தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளின் சேவைகளைப் பயன்படுத்துங்கள். சோதனைகள், தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணங்களுக்கான வழிகாட்டுதல்களை அதிகாரிகள் இறுதி செய்ய வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. அதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் அரசிடம் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நவம்பரில் உச்சமடையுமா கரோனா பாதிப்பு? ஐசிஎம்ஆர் விளக்கம்