ஹைதராபாத்: அடுத்த 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் அதிகாரப்பூர்வ இந்திய பயணத்தை பிப்ரவரி 24-25 தேதிகளில் தனது விமானமான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' மூலம் மேற்கொள்ளவிருக்கிறார். பிப்ரவரி 24ஆம் தேதி குஜராத்தில் தரையிறங்கிய பின்னர் மெலேனியா ட்ரம்புடன் சேர்ந்து, அவர் தனது 1.5 மில்லியன் டாலர் மதிப்புடைய ஏழு இருக்கைகள் கொண்ட சொகுசு கார் 'தி பீஸ்ட்'-ல் நேரடியாக அகமதாபாத்தின் மொடீரா மைதானத்திற்கு செல்வார். 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' மற்றும் 'தி பீஸ்ட்' இரண்டும் தனித்துவமானவை, உலகத்தரம் வாய்ந்தவை. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்...
ஏர் ஃபோர்ஸ் ஒன்
காற்றில் பறக்கும் வெள்ளை மாளிகை என்றழைக்கப்படும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம், அமெரிக்க ஜனாதிபதியை உலகின் எந்த மூலைக்கும் அழைத்துச் செல்கிறது.
அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஏர் ஃபோர்ஸ் ஒன், அது எங்கு பறந்தாலும் அதன் மறுக்க முடியாத இருப்பைக் குறிக்கிறது. "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா", அமெரிக்கக் கொடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் முத்திரை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அந்த விமானம், அதிபர் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயணம் செல்ல எப்போதும் தயாராக இருக்கும்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் நடுவானில் எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டது. மேலும் மின்காந்த அலைகளை தாங்கும் வகையில் விமானத்தில் மின்னணுவியல் உள்ளது. உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் மேம்பட்ட பாதுகாப்பான தகவல் தொடர்பு உபகரணங்கள், அமெரிக்கா மீது தாக்குதல் நடந்தால் விமானம் மொபைல் கட்டளை மையமாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் மூன்று நிலைகளில் 4,000 சதுர அடி அளவைக் கொண்டுள்ளது, இதில் ஒரு அதிபருக்கான தனி அறை, ஒரு பெரிய அலுவலக அறை, மாநாட்டு அறை மற்றும் அதிபருடன் வருபவர்களுக்கான அறைகள் உள்ளன. இது தவிர, ஒரு தனி மருத்துவருடன் கூடிய மருத்துவ அறையும் உள்ளது. இந்த விமானத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளன. அவை ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவளிக்க முடியும்.
தொலைதூர இடங்களுக்கு பயணிக்கும்போது தேவைபட்டால் அதிபருக்கு சேவைகளை வழங்குவதற்காக பல சரக்கு விமானங்கள் இந்த விமானத்திற்கு முன் பறந்து செல்லும்.