பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியாவையும் அதிபர் ட்ரம்பையும் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கவுள்ளார்.
கிட்டத்தட்ட 12 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்டு நடக்கவிருக்கும் 22 கிலோமீட்டர் சாலை பரப்புரையில் மோடியும் ட்ரம்பும் கலந்துகொள்ளவுள்ளனர். இதில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத்தில் திட்டமிடப்பட்ட மூன்று மணி நேரத்தில் சபர்மதி ஆசிரமத்திற்குச் செல்லவுள்ளார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் 1.25 லட்சம் பேர் கூடவுள்ளனர்.
இதற்காக, குஜராத் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்குப் பிறகு, இருபெரும் சக்திவாய்ந்த நட்பு நாடுகளின் தலைவர்கள் கூடும் நிகழ்ச்சி இது என்பதால், இதற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்க முதல் பெண்மணி, அதிபர் ட்ரம்ப் பின்னர் ஆக்ராவுக்குச் செல்வார்கள், அங்கு அவர்களை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்பார் என அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காதல் சின்னமான தாஜ்மஹாலின் வரலாற்று நினைவுச் சின்னத்தில் சிறிது நேரம் கழித்த பின்னர் இந்த ஜோடி டெல்லிக்குச் செல்கின்றனர்.
பிப்ரவரி 25ஆம் தேதி, குடியரசுத் தலைவர் மாளிகையில் தரவுள்ள அணிவகுப்பு மரியாதையை ட்ரம்ப் ஏற்கவுள்ளார். மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் ட்ரம்ப் மரியாதை செலுத்தவுள்ளார்.
பின்னர், ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இரு தலைவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை. பின்னர், சில இந்தியத் தலைமை நிர்வாக அலுவலர்களுடன் ட்ரம்ப் உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க முதல் பெண்மணி டெல்லி அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி லைட்ஹைசர் ட்ரம்புடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், வர்த்தகத்தில் கவனம் செலுத்தும் சேவைகளைத் தவிர்க்கும் ஒரு சிறு ஒப்பந்தம்கூட சாத்தியமில்லை. கடந்த எட்டு மாதங்களாகத் தொடரும் பேச்சுவார்த்தைகள் விவசாயம், பால் போன்ற முக்கியத் துறைகளில் சிக்கித் தவிக்கின்றன.
ஆதாரங்களின்படி, உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகளில் முக்கிய விவாதங்கள், அறிவிப்புகள் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறையாக இருக்கும், ஏனெனில் அமெரிக்காவுடன் வர்த்தக உபரியைக் குறைப்பதற்கான கூடுதல் வழிகளை இந்தியா கவனிக்கிறது. அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரி தற்போது 30 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 16 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்ப்பின் வருகைக்காக காத்திருக்கும் தாஜ்மஹால்... பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு