இரு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அகமதாபாத்திலுள்ள மொடீரா மைதனத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய டரம்ப், 'நமஸ்தே' என்று கூறி தனது உரையை தொடங்கினார்.
அப்போது பேசிய ட்ரம்ப், "இந்தியாவை அமெரிக்கா நேசித்து மதிக்கிறது. இந்திய மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் நம்பிக்கைக்குரிய நாடாக இருக்கும். டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய கால்பந்து மைதானத்தில் மோடியை வரவேற்றோம். உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா எங்களை வரவேற்றுள்ளது.
எங்களுக்கு அளிக்கப்பட்ட மிக சிறந்த விருந்தினர் உபசரிப்பு தன்மையை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். எங்கள் மனதில் இந்தியாவுக்கு தனியாக ஒரு இடமுண்டு. தேனீர் விற்பனையாளராக மோடி தனது வாழ்க்கையை தொடங்கினார். இப்போது அனைவரும் அவரை விரும்புகிறார்கள்.
ஆனால், பேரம் பேசுவதில் அவர் கடினமானவர் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல. கடின உழைப்பு, ஈடுபாடு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக அவர் விளங்குகிறார். ஒருவர் எப்படி வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதற்கு மோடியே எடுத்துக்காட்டு.
தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, ஷோலே போன்ற பாலிவுட் படங்களை பார்ப்பதிலும் பாங்குரா நடனத்தைக் கண்டு ரசிப்பதிலும் உலகமே மகிழ்ச்சி கொள்கிறது. ஹோலி போன்ற வண்ண மையமான பண்டிகைகளும் இங்குதான் கொண்டாடப்படுகிறது.