திரிபுரா பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் பாலிமர் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியரான ஹர்ஜீத் நாத், கோவிட் -19 நோயாளிகளுக்காகப் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் 'கோவிட் -19 ரோபோட்' என்ற இயந்திரப்படிவத்தை உருவாக்கினார். அதனை கரோனா சிறப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்த மாநில அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மனிதர்களின் தலையீடு இல்லாமல் கரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள், பிற அத்தியாவசிய பொருள்களை வழங்கக்கூடிய 'கோவிட் -19 ரோபோட்' என்ற இயந்திரப்படிவத்தை உருவாக்கியுள்ளேன்.
இந்த நான்கு சக்கர இயந்திரப்படிவத்தை உருவாக்குவதற்கு காரணம் கரோனா மருத்துவப் பணிகளில் ஈடுபடும் நமது சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியரைப் பாதுகாப்பதற்குத்தான். இந்த இயந்திரப்படிவம் நோயாளிகளுக்கு மருந்துகள், தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்களை வழங்கும். நோயாளிகளைக் கண்காணிக்க விரும்பினால் ஒரு கேமராவும் அதில் உள்ளது" என்றார்.
மேலும் அவர், "25 ஆயிரம் ரூபாய் செலவழித்து, மூன்று மோட்டார்கள், இரண்டு ரீ-சார்ஜபிள் லீட்-ஆசிட் பேட்டரிகள், டிரான்ஸ்மிட்டர், ரிசீவர், யூஎஸ்பி வெளியீடு (USB Output) உள்ளிட்ட உதிரி பாகங்களைப் பயன்படுத்தி இந்த இயந்திரப் படிவத்தை உருவாக்க இரண்டு வாரங்கள் ஆகின. இந்த இயந்திரப்படிவத்தால் மருந்துகள், உணவு, நீர் உள்ளிட்ட 10-15 கி.கி. எடையை சுமக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ரோபோக்கள்!