மணல் குவியலுக்கும், வெப்ப காற்றுக்கும் பெயர்போன பாலைவன பிரதேசமாக ராஜஸ்தான் மாநிலம் திகழ்கிறது.
இங்குள்ள, சவாய் மாதேபூர் (Sawai Madhopur) மாவட்டத்தில், நாட்டின் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவான ரன்தம்போர் (Ranthambore) அமைந்துள்ளது.
பண்டைய காலக் கோட்டைகள் வானுயர்ந்து நிற்கும் இங்குதான், முக்கண் நாயகனாக விநாயக பெருமான் கோயில் கொண்டுள்ளார். அம்மக்கள் இவரை “த்ரிநேத்ரா கணேஷ்” (முக்கண் கணபதி) என அழைக்கின்றனர்.
இந்தக் கோயில் விநாயக பெருமானுக்கு நாட்டில் தோன்றிய முதல் கோயில் என்றும் கருதப்படுகிறது. 10ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியுடன் நடைபெற்ற கடுமையான போருக்கு மத்தியில், மாமன்னர் ஹமீர்தேவ் கனவில் தோன்றிய விநாயக பெருமான் நல்வாக்கு அளித்தார்.
அந்தப் போரில் மாமன்னர் ஹமீர்தேவ் வெற்றியும் பெற்றார். இதையடுத்து அவர் வசித்த கோட்டையிலேயே விநாயகருக்கு கோயிலை எழுப்பினார். இதுவே கோயிலின் வரலாறு.
இக்கோயிலில் விநாயகர் முக்கண் நாயகனாக மனைவிகள் ரித்தி, சித்தி மகன்கள் சுப் மற்றும் லாப் ஆகியோருடன் காட்சியளிக்கின்றனர். ஆகவே, இங்கு பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்தக் கோயிலில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் பக்தர்கள் தங்களின் குறைகளை காகிதத்தில் கோரிக்கையாக எழுதி விநாயகரிடம் ஒப்படைக்கின்றனர். அவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்.
மேலும் வெளியூரில் வசிக்கும் பக்தர்களும், “கணபதி பாபா, பைகோடா கோயில், ரன்தம்போர், சவாய் மாதேபூர் மாவட்டம், த.பெ. எண் 322021 என்ற முகவரிக்கு தங்களின் கோரிக்கை, வாழ்த்துக் கோரல் மனுக்களை அனுப்பிவைக்கின்றனர்.
பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் முக்கண் விநாயகர்! புராண ரீதியாக இக்கோயிலில் இலங்கை சென்று திரும்பிய ராமன் வழிபட்டார் என்றும் அதன்பின்னர் கிருஷ்ணர் வழிபட்டார் என்றும் ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. மேலும், பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இக்கோயில் ஜெய்ப்பூரிலிருந்து சரியாக 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆரவல்லி விந்தியா மலை தொடரில் அமைந்துள்ளது. தற்போது கரோனா நெருக்கடி காலம் என்பதால் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் செல்லும் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் விநாயகரின் அருள் வேண்டி காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:கருணையை உருவான காணிபாக்கம் ஸ்ரீ வரசித்தி சுயம்பு விநாயகர்!