ஒடிசா மாநிலம், கொரபூட் மாவட்டத்தில் அரசு நடத்திவரும் உறைவிடப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியையின் கணவர் பல மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார்.
தலைமை ஆசிரியை தான் தங்கியிருந்த அறையில் கணவரை அவ்வப்போது தங்கவைத்து வந்ததாகவும், பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த மாணவியை, ஆசிரியர்கள் குடியிருப்புப் பகுதிக்கு வரவழைத்து அவர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருப்பதையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க :உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டப் பெண் உயிரிழப்பு
அதன்பேரில் கணவரை கைதுசெய்து விசாரித்ததில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதாகவும், இதனடிப்படையில் அவர்மீது இ.பி.கோ., போக்சோ சட்டங்களின் கீழ் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
"கணவர் தனது மனைவிக்குத் (தலைமை ஆசிரியை) தெரியாமல் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து வந்தார்" என துணை வட்டார காவலர் வருண் குன்டுபாலி கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, உரிய மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என கொரபூட் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜ்ஸ்ரீ தாஸ் கூறினார்.
"கணவரை ஆசிரியர்கள் விடுதியில் தங்கவைத்த தலைமை ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட நலத்துறை அலுவலர் மதுஸ்மிதா மோஹபத்ரா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நித்யானந்தாவின் இந்து தேசம் உண்மையா ?