டெல்லி: மனித பரிசோதனைகளில் இருக்கும் மூன்று தடுப்பூசிகளில் ஒன்று வெகுவிரைவில் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று கரோனா நோய்க் கிருமி தடுப்பூசியின் தேசியப் பணிக்குழுவின் தலைவரும், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினருமான மருத்துவர் வி.கே. பால் கூறியுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசி சோதனைகள் வெற்றிபெற்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் முதன் முதலாக இந்தியர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) இந்த வாரம் மும்பையில் உள்ள கே.இ.எம்., நாயர் ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் என அழைக்கப்படும் தடுப்பூசி ‘சிஏடாக்ஸ்’ 2 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கவுள்ளது.
முதல் 2ஆம் கட்ட சோதனைகளின் ஆரம்ப முடிவுகளில் தடுப்பூசி வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்பதைக் காட்டுயிருக்கிறது. தடுப்பூசி டி-செல் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்றும் (தடுப்பூசி போட்ட 14 நாட்களுக்குள்), ஆன்டிபாடிகளை (28 நாட்களுக்குள்) உருவாக்குகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தடுப்பூசியின் 2 ஆம் கட்டம், 3 ஆம் கட்ட சோதனைகளின் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
இந்தியாவில் தற்போது மூன்று கரோனா தடுப்பூசிகள் முன்னணி சோதனைகளில் உள்ளன. பாரத் பயோடெக், ஐ.சி.எம்.ஆர் இணைந்து உருவாக்கிய இந்தியாவின் முதல் உள்நாட்டு கரோனா தடுப்பூசி ‘கோவாக்சின்’, சைடஸ் காடிலாவின் ‘ஜைகோவ்-டி’ ஆகிய இரண்டும் மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்ப கட்டங்களிலுள்ளன.