தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பறிபோகும் திருநங்கைகள் உரிமை: எப்போது உடையும் உங்கள் கள்ள மௌனம்? - திருநங்கைகள் உரிமை

திருநங்கைகள் கடந்த ஆண்டு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திருநங்கைகள் சட்ட திருத்த மசோதாவில் சில மாற்றங்களை செய்து மீண்டும் அவர்களை வஞ்சித்திருக்கிறது பாஜக அரசாங்கம்.

transgender

By

Published : Jul 20, 2019, 8:47 PM IST

Updated : Jul 20, 2019, 9:18 PM IST

இந்திய சமூகத்தால் நீண்டகாலமாக புறக்கணிப்பட்டு, கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றனர் திருநங்கைகள். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதோடு பாலியல் ரீதியான தொல்லைகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. தற்போதுதான் அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியுள்ளது. எனினும் முறையான தீர்வு கிடைக்கவில்லை.

திருநங்கைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் சட்ட திட்டங்கள் சில இருப்பதுதான் அவர்களுக்கு ஆறுதல். நேற்று நாடாளுமன்றத்தில் சமூகநீதி மற்றும் நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், திருநங்கைகள் சட்ட மசோதா 2019-ஐ அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில் திருநங்கைகளுக்கு ஆதரவாக ஒரு சில அம்சங்கள் இருந்தாலும், திருநங்கைகள் கடந்த ஆண்டு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திருநங்கைகள் சட்ட திருத்த மசோதாவில் சில மாற்றங்களை செய்து மீண்டும் அவர்களை வஞ்சித்திருக்கிறது பாஜக அரசாங்கம்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருநங்கைகள் சட்ட மசோதா 2019, அவர்களை எவ்வாறு வஞ்சிக்கிறது என்பதை அறிய திருச்சி சிவாவின் பரிந்துரையை சற்று பார்க்க வேண்டும்.

திருச்சி சிவா

திருச்சி சிவாவின் தனிநபர் மசோதாவில் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்த 27 ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு அந்த மசோதா திருத்தப்பட்டது. மத்திய அராங்கம் 2018 டிசம்பர் 17 அன்று அறிமுகம் செய்த இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. திருநங்கைகள் போராட்டத்தில் இறங்கினர். எனினும் மத்திய அரசாங்கம் அதற்கு செவி சாய்க்கவில்லை.

திருநங்கைகளுக்கான தனி வேலைவாய்ப்பு மையம், திருநங்கைகளுக்கு தேசிய - மாநில அளவில் ஆணையம், கல்வி நிறுவனங்களில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு போன்றவற்றை திருச்சி சிவா பரிந்துரை செய்திருந்தார். இதனை மத்திய அரசு ஏற்கவில்லை.

அதேபோல் ஒருவர் மனதால் திருநங்கையாக இருந்தால் அவரை திருநங்கையாக ஏற்க வேண்டும் என்பது சிவாவின் பரிந்துரை. ஆனால் மத்திய அரசாங்கம் திருநங்கை என்பவர் ஆண், பெண்ணின் கலவையாக இருக்க வேண்டும் என அவர்கள் அடையாளத்தை கொச்சைப்படுத்துகிறது. இப்படி திருநங்கைகள் சட்ட மசோதாவில் முற்றிலும் ஏற்க முடியாத சில விஷயங்கள் உள்ளன.

திருநங்கைகள் நலனுக்கான சட்ட மசோதாவை அமைக்கும்போது அந்தக் குழுவில் நாங்கள் இடம்பெற வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை வைக்கின்றனர். திருநங்கைகள் பற்றிய புரிதலற்றவர்கள் எப்படி திருநங்கைகள் நலன் சார்ந்த விஷயங்களை செயல்படுத்துவது பற்றி முறையாக சிந்திக்க முடியும் என அவர்கள் நியாயமான கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு முன்பு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு தங்கள் நிலைமையை விளக்கி கருத்துகளை பதிவு செய்தபோதும், திருநங்கைகளுக்கான சட்ட மசோதாவில் குறை இருந்தது. 2018 டிசம்பர் 17 அன்று அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவில் திருநங்கைகள் யாசகம் கேட்பது கிரிமினல் குற்றம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு திருநங்கைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது, முறையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராத அரசாங்கம் யாசகம் கேட்பதை எப்படி தவறு எனலாம் என அவர்கள் குரல் எழுப்பினர்.

திருநங்கைகள் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு

திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை அமைத்து தருவதிலும் இங்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன. 2017-இல் கேரள முதல்வர் பினராயி விஜயன், கொச்சி மெட்ரோ ரயில் பணிகளுக்கு திருநங்கைகளை பணியமர்த்தியது பெரும் பாராட்டை பெற்றது. ஆனால் சில நாட்களிலேயே மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்ட திருநங்கைகளில் சிலர் வேலையை விட்டு செல்வதாக செய்திகள் வெளியாகின. முறையான இருப்பிட வசதி மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்டவை இல்லாத காரணங்களால்தான் அவர்கள் பணியை விட்டு செல்வதாக கூறப்பட்டது.

ஆண், பெண் வேலை பார்க்கும் இடங்களில் திருநங்கைகள் சுதந்திரமாக பணியாற்றக் கூடிய சூழல் இங்கே இல்லை. இந்தியாவிலேயே முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி, திருநங்கை நீதிபதி என பல்வேறு துறைகளில் திருநங்கைகள் முன்னேறி வருகின்றனர். ஆனால் அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களில், பயிலும் கல்லூரிகளில் அவர்களுக்கென கழிப்பிடம் ஒன்று இருக்கிறதா என்றால் கேள்விக்குறி. அவர்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று, தங்களுக்கென பொதுக் கழிப்பிட வசதி. ஏனென்றால் ஆண்கள் கழிப்பிடத்துக்கு அவர்கள் செல்ல விரும்புவதில்லை, பெண்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

திருநங்கைகளின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்கள் போராட்டத்தில், இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியான கிரேஸ் பானு உட்பட பல திருநங்கைகள் கலந்துகொண்டனர். சமூக பிரச்னைகளுக்கான மக்கள் போராட்டங்களில் தங்களை ஒரு அங்கமாக நினைத்து திருநங்கைகள் பங்கேற்கின்றனர். ஆனால் திருநங்கைகளுக்கு ஒரு பிரச்னை என்றால் இந்த பொதுச் சமூகம் கள்ள மௌனம் காக்கிறது. எப்போது உடையும் உங்கள் கள்ள மௌனம்?, திருநங்கைகள் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்!...

Last Updated : Jul 20, 2019, 9:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details