நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் விவசாயம் தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக குற்றஞ்சாட்டி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த மூன்று வேளாண் சட்டடங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் காரணமாக விவசாயத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைகூட எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். இது குறித்து பஞ்சாப் அரசு தனது ட்விட்டரில், "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தின் 21 ரயில் நிலையங்களில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், சரக்கு ரயில்களை இயக்க அனுமதித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.