சாலை விபத்து என்பது போக்குவரத்து விதிமீறல்களால் மட்டும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் அரசின் மெத்தன போக்கால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் மோசமான சாலைகளும் இந்த விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. அவ்வாறு சாலையில் உள்ள சின்னஞ்சிறு பள்ளங்கள் வாகனத்தில் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோரின் உயிருக்கே கேடாக அமைந்துவிடுகின்றன.
இது ஒருபுறம் இருக்க தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தால், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவலர்கள் லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதெல்லாம் செய்திகளாகி கொண்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து காவலர்களை பெரும்பாலான வாகன ஓட்டிகள் வில்லன்களைப் போன்றே பார்க்கின்றனர்.
ஆனால் இங்கு ஒரு போக்குவரத்து காவலர் மக்களுக்கு சேவை செய்வதோடு, பணி முடிந்த பின் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை செய்து பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். பஞ்சாப் மாநிலம் பாத்திண்டா நகரத்தைச் சேர்ந்த குர்பக்ஷ் சிங் என்ற அந்த போக்குவரத்துக் காவலர், சாலையில் உள்ள சிறிய பள்ளங்களை சரிசெய்யும் பணியை மேற்கொண்டுவருகிறார். அவர் தனது நண்பரான மற்றொரு போக்குவரத்து காவலருடன் இணைந்து நகரத்தின் பாகு சாலை, லிபர்டி சவுக், தனா மந்தி உள்ளிட்ட பகுதி சாலைகளில் இருக்கும் பள்ளத்தை சீரமைத்துள்ளார்.
அவரின் இந்த செயல் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த காவலரின் உன்னதமான செயலை பாராட்டி, ஹைதராபாத்தில் வசிக்கும் நவுசீன் கான் என்ற பெண் மருத்துவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை ஈர்த்ததால் அவரும் அதை ரீ ட்வீட் செய்திருந்தார்.
இது குறித்து போக்குவரத்து காவலர் குர்பக்ஷ் சிங் கூறுகையில், கடந்த சில வாரங்களுக்கு முன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறிய அவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தையடுத்து நான் இந்த பணியை மேற்கொண்டுவருகிறேன் என தெரிவித்தார்.