தமிழ்நாடு

tamil nadu

பட்டாசு விவகாரத்தில் டி.ஆர். பாலு எழுப்பிய கேள்வி - மக்களவையில் காரசார விவாதம்

By

Published : Dec 6, 2019, 8:43 PM IST

டெல்லி: மக்களவையில் சுற்றுச்சூழல் குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சரிடம் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

t.r.baalu prakash javadekar
t.r.baalu prakash javadekar

திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவரும் திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி கழக உறுப்பினருமான டி.ஆர். பாலு, இன்று (6.12.2019) மக்களவையில் சுற்றுச்சூழல் குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு :-

டி.ஆர்.பாலுவின் கேள்வி,

1) 'மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் தீபாவளி காலத்தில் அக்டோபர் 27ஆம் தேதியன்று சுற்றுச் சூழல் பாதிப்புகளை கண்டறிய சென்னையின் பல பகுதிகளில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டதா? அப்படியெனில் அவை எந்தெந்த இடங்களில் எத்தனைக் கருவிகள் பொருத்தப் பட்டிருந்தன?

2) அக்கருவிகளின் விவரப்படி, பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் (Particular Matter) எவ்வளவு அடர்த்தியில் இருந்தது? அந்த கருவிகளின் கணக்குப்படி பசுமை வெடிகளின் பயன்பாடு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளதா? அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டனவா?

3) பசுமை வெடிகளின் பயன்பாட்டை உறுதி செய்யவும், அதன்மூலம் சுற்றுச்சூழல் மாசு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மிகாமல் இருப்பதற்கும், அதே நேரத்தில் உள்நாட்டுப் பட்டாசுத் தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகாத வகையில் எத்தகைய நடவடிக்கைகள் இந்த அரசு மேற்கொண்டுள்ளது? என்பதைத் தெரிவிக்க வேண்டும்' எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,

'மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தீபாவளி நேரத்தில் சிறப்புக் கண்காணிப்பு மேற்கொள்வதற்கென, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்றின் தன்மையைத் தொடர்ந்து கண்காணிக்கும் கருவிகளை சென்னையில் திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், சௌகார்பேட்டை, தியாகராய நகர் ஆகிய நான்கு இடங்களில் பொருத்தியது.

இது வழக்கமாகப் பொருத்தப்பட்டுள்ள தொடர் கண்காணிப்புக் கருவிகளைவிட கூடுதலாகும். இவற்றில் மூன்று இடங்களில் மாசு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டிருந்தது.

அரசு, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்குழுமம் (CSIR), தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (NEERI), மத்திய சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு வாரியம் (PESO) ஆகிய அமைப்புகளோடு பசுமைப் பட்டாசுகள் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

இதனடிப்படையில்,
1) பசுமைப் பட்டாசுக்கான வரைமுறைகள் பயன்படுத்தப்படும் பொருட்கள்,
2) புதிய மேம்படுத்தப்பட்ட செய்முறைகள் (வெளிச்சம் மற்றும் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகள்)
3) தொடர்புடையவர்கள் மற்றும் உள்நாட்டு பட்டாசுத் தயாரிப்பாளர்களுக்கான செய்முறைப் பயிற்சி
4) பசுமைப் பட்டாசுகள் மற்றும் வழக்கமான பட்டாசு வகைகள்
5) பட்டாசுகளின் நச்சு வெளிப்பாட்டைப் பரிசோதிக்கும் சோதனைக் கூடங்கள்
6) அனுமதிக்கப்பட்ட மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குரிய ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்கள்
7) பசுமைப் பட்டாசுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அமைப்புகள்

உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

பசுமைப் பட்டாசுகள் குறைந்தப் பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் மாசுப் பொருட்கள் 20 முதல் 30 விழுக்காடு வரை குறைவாகவே வெளிப்படும்.

லித்தியம், ஆர்சீனிக், பேரியம் மற்றும் ஈயம் போன்ற உலோகங்கள் பசுமைப் பட்டாசுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, PESO அமைப்பு பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பதற்குரிய பொருட்களைப் பரிந்துரை செய்து, அவற்றிற்கு சான்றிதழ் வழங்கி வருகிறது.

இவ்வகைப் பட்டாசுகள் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களுடைய சங்கங்களின் ஆதரவைப் பெறும் வகையில், செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன' என்று அவர் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: சத்தீஷ்கரில் நடன மங்கை கூட்டு பாலியல் வன்புணர்வு.!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details