ஊரடங்கு உத்தரவை மீறி, மக்களுக்குப் பொருட்கள் விநியோகிப்பதில் மேற்கு வங்க மாநிலத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று பரிசோதனை செய்யக்கோரியும் அம்மாநிலச் செயலாளர் சூர்யா காந்தா மிஸ்ரா உள்ளிட்ட உயர்மட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள், கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர், அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர்.
மாநிலத்தின் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன் முறையில் சீராகப் பொருட்களை வழங்கக் கோரி போராட்டம் நடத்திய அவர்கள், ஏழை மக்கள் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் பெரும்பான்மையான இடங்களில் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர் என்றும், மம்தா அரசு இவற்றை மறைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது என்றும் வேதனைத் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேற்கு வங்க மாநில நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்த அவர்கள், கரோனா தொற்று பரவலைத் தடுக்க அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.