சமூக மற்றும் அரசியல் முனைகளில் ஏழு தசாப்தங்களாக (70 ஆண்டுகளாக) நாட்டை உலுக்கிய அயோத்தி பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது. 40 நாள்கள் நீடித்த விசாரணைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். இதனால், இறுதித் தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் 4 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
இந்த பணியில், உத்தரப்பிரதேச அரசு 16 ஆயிரம் தன்னார்வலர்களை நியமித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் நடத்திய ஒருமித்த கூட்டத்தில், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அவர்கள் அறிவித்தனர். மேலும் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், கொண்டாட்டங்கள் அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மக்களை வலியுறுத்தினர். இது முதிர்ச்சியின் உணர்வை பிரதிபலிக்கிறது.
அயோத்தி தீர்ப்பு பல தசாப்தங்களாக நீடித்த சட்ட மோதல்களுக்கும் மத முரண்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று இந்து மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்ட பின்னர், அப்போதைய பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு தலைவலியில் இருந்து தப்பிக்க இதனை குடியரசுத் தலைவர் முறையீட்டின் மூலம் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற நினைத்தது.
அதன்படி, 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் இங்கு ஏதேனும் கோயில் இருந்ததா என ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதனை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அதன்பின்னர், வழக்கு உயர் நீதிமன்றத்தின் கைகளுக்கு சென்றது. வாதத்தின் போது, விக்ரமாதித்ய மன்னர் அயோத்தியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கோயிலைக் கட்டியிருந்தார். அக்கோயில் 11ஆம் நூற்றாண்டில் கூட புனரமைக்கப்பட்டது என்று இந்து கட்சிகள் வாதிட்டன.