தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புறக்கணிக்கப்பட்ட ஒரு மனித இனத்தைக் கொண்டாடவேண்டிய தினம் இன்று! - மிஸ் கூவகம்

மனித இனத்தின் ஒரு பாலினம் குறித்து முழுவதும் தெரிந்துகொள்ளாமல் ஒதுக்க வேண்டும், நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணம் பலர் மனதில் தோற்றுவித்த கயவர்கள் எவரோ? அப்படி... காலம் காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு பாலினத்தின் அறைகூவலை, இன்று (ஏப்ரல் 15) திருநங்கையர் தினத்தின் சிறப்புத் தொகுப்பாக உங்களுக்குக் காட்சிப்படுத்துகிறோம்.

TODAY APRIL 15 NATIONAL TRANSGENDER DAY

By

Published : Apr 15, 2019, 5:09 PM IST

Updated : Apr 15, 2019, 6:26 PM IST

மனிதனாகப் பிறந்த ஆண், பெண் என்ற இருபாலின வகைகள் இங்கு தங்களின் நீதிக்காக நித்தம் போராடும் சூழல் நிலவிவருகிறது. அந்தவகையில் மூன்றாம் பாலினமான திருநங்கையர்கள் எனும் ஒரு மனித இனம் இத்தேசத்தில் எந்த அடிப்படைத் தேவைகளையும் பெறாமல் நசுக்கப்பட்டுவருவது எவரும் அறிந்திருப்பீரோ! அப்படி அறிந்திருந்தும் ஒரு சிலருக்கே திருநங்கைகளை ஏற்கும் மனோபாவம் இருப்பது ஏனோ? மனதில் திருநங்கைகள் குறித்து அறியப்படாமல், நற்புரிதலோ உணர்தலோ இல்லாமல் இருப்பதற்கு, தவறான கண்ணோட்டம் மேலோங்கி நிற்பதே காரணமாக அமைகிறது.

யார் இந்தத் திருநங்கைகள்?
கரு ஆணாகவோ, பெண்ணாகவோ, மூன்றாம் பாலினமாகவோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்பதில்லை. கர்ப்பப்பையில் கரு உருவாகும்போது குரோமோசோம் (நிறமூர்த்தம்) அதைத் தீர்மானிக்கிறது. எக்ஸ்.ஒய். குரோமோசோம்கள் சேர்ந்தால் அது ஆண் குழந்தையாகவும், எக்ஸ்.எக்ஸ். குரோமோசோம்கள் சேர்ந்தால் அது பெண் குழந்தையாகவும், எக்ஸ்.எக்ஸ்.ஒய். அல்லது எக்ஸ்.ஒய்.ஒய். கருவில் சேரப்பெற்றால் அது மூன்றாம் பாலினமாகக் குழந்தை பிறக்கிறது. இது மருத்துவ ரீதியிலான உண்மை.

யார் இந்த திருநங்கைகள்?

என்ன செய்கிறார்கள் இவர்கள்?
இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் திருநங்கைகள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பெருமையாகவும், கண்ணியத்தோடும் கடைபிடித்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களாலும், சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்படும் இவர்கள், தங்களுக்குள்ளேயே ஒரு உறவினை ஏற்படுத்திக்கொண்டு ஒரு குடும்பம் போன்று வசித்து வருகின்றனர். பிரித்துக்கொள்ள முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொள்ளும் இவர்கள், அதனையே தங்கள் அடையாளமாகவும் கருதுகின்றனர்.

உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்?
மூன்றாம் பாலினமான திருநங்கைகளுக்கு இச்சமூகத்தில் போதிய உரிமைகள் இன்றுவரை கிடைக்கவில்லை. இந்த சமுதாயத்தில் இவர்கள் மீது பாலியல் தொழிலாளிகள் என்ற போர்வை மட்டுமே போர்த்தப்படுகிறது... தொடர்ந்தும் போர்த்தப்பட்டுவருகிறது. அதிலிருந்து இவர்கள் மீண்டுவர நினைத்தால்கூட இச்சமுதாயம் இதற்கு ஒருபோதும் இடம் தராது என்பதற்குத் திருநங்கைகளின் வாழ்க்கை முறைகளே சான்றாக அமைகிறது.

உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்?

இவர்களுக்கான அங்கீகாரம்
163 நாடுகளில் திருநங்கைகளை அங்கீகாரம் செய்துள்ளனர். இவை பெரும்பாலும் வளர்ந்த, வளரும் நாடுகள் ஆகும். இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும், இவர்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது வேதனைக்குரியதே! என்றாலும் இச்சமூகத்தில் போராடி வென்ற திருநங்கைகளை நாம் காண முடிகிறது என்றால், அது வெறும் போராட்டம் மூலம் கிடைத்த வெற்றியல்ல என்பதனை உணர்கிறவர்கள் உணர்வுப்பூர்வமாக அறிந்துகொள்ள முடியும்.

கலை, இலக்கியம், மொழி, பாதுகாப்பு, ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் இவர்களின் பங்கு சற்று தென்பட ஆரம்பித்துள்ளது. அடக்கி ஒடுக்கிப் புதைக்கப்பட்டவர்கள், இப்போது தளிர் விட்டு விருட்சமாக மேலோங்கி வருவது சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைகிறது.

இவர்களுக்கான அங்கீகாரம்

இவர்களுக்கான கொண்டாட்டங்கள்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வருடத்தில் இந்த ஒரு நாளை மட்டும்தான் திருநங்கைகள் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்து மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்வார்கள். மேலும், இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருநங்கைகளுக்கான 'மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி நடைபெறும். இதில் பல நாடுகளில் உள்ள திருநங்கைகள் கலந்து கொண்டு பரிசுகளைத் தட்டிச் செல்வர்.

மிஸ் கூவகம்

சிந்திக்க வேண்டியவை எவை
மாற்றுத்திறனாளி என்றால் குழந்தை பிறந்த பின் தெரிந்து கொள்ளலாம், பாலியல் ரீதியிலான குறைப்பாட்டை வெளிப்படையாகப் பெரியவர்களே பேசத் தயங்கும்போது, அந்த சிறுவனால் தான் ஆண் இல்லை என்றும் பெண்மை உணர்வுகள் கொண்ட திருநங்கை என்பதை எப்படிக் கூற முடியும்? அப்படிக் கூறினால் வீட்டில் உள்ள பெற்றோர் குழந்தை விளையாட்டாகக் கூறுகிறது என்று சும்மா விடுவர், இல்லையேல் அந்தக் குழந்தையை அடித்துத் துன்புறுத்தி மாறச்சொல்லுவார்கள்... எப்படி மாற்ற முடியும்? அவரின் உள்ளே இயற்கையாக உருவான குணாதிசயங்களைச் சற்று சிந்தியுங்கள்

  • பிறப்பால் பாலின கோளாறுடன் பிறந்த குழந்தை செய்த தவறுதான் என்ன?
  • ஏன் அந்தக் குழந்தையை நீங்கள் புறக்கணிக்க வேண்டும், உங்களை விட்டால் அந்தக் குழந்தைக்கு ஏது போக்கிடம் என்று சிந்தித்து இருக்கிறீர்களா?
  • சொந்த பெற்றோரே அந்தக் குழந்தையைப் புறக்கணித்தால் அதன் வாழ்க்கைக்கான வழிதான் என்ன?
  • ஏன் அந்தக் குழந்தையை ஏற்க மனம் வரவில்லை?
  • அந்தக் குழந்தையை ஏன் அவமானமாக நினைக்கவேண்டும்?

இவை அனைத்தும் இயற்கையின் பிழை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தச் சமுதாயத்தில் மனிதர்களை மதிப்பது போன்று திருநங்கைகளையும் மதிக்க வேண்டும். இவர்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகள் நிறைவேற்றும் தருணம்தான், இச்சமுதாயத்திலிருந்து ஒருபோதும் இவர்கள் வேறுபடுத்தப்படுத்தப் படமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் பிறக்கும்!

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது என்ற ஒளவைக் கிழவியின் பாடல் வரிகள் செவிகளில் ஒலிக்கிறது. புவியில் சுழலும் அனைத்து மானிட பிறவிகளுக்கும் சமநிலை பங்கு அளிப்போம். மனிதத்தைப் போற்றுவோம்!

Last Updated : Apr 15, 2019, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details