வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிரதமர் மோடி தனது 70ஆவது வயதில் அடிஎடுத்து வைக்கிறார். இதனை பாஜகவினர் மக்களுக்கு சேவை செய்து கொண்டாட எண்ணியுள்ளனர்.
இதற்காக நாடு முழுவதும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை சேவா சப்தா எனப்படும் சேவை வார விழாவை கொண்டாடவுள்ளனர்.
கரோனா வைரஸ் நெருக்கடிகளுக்கு மத்தியில், 'சேவா சப்தா'வின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களைக் குறித்து அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் பாஜக கட்சி சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில்,“நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திலும் 70 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கவேண்டும். 70 பார்வை குறைபாடு உடையவர்களுக்கு கண்ணாடி வழங்குதல். கரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து 70 மருத்துவமனைகள் மற்றும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாஜக தலைவர்கள் பழங்களை விநியோகித்தல் போன்றவை அடங்கும்.
மருத்துவமனைகள் மூலம் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப 70 கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா நன்கொடை வழங்க ஏற்பாடு செய்யுமாறு, மாநிலத் தலைவர்கள் மற்றும் பணியாளர்களைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மோடியின் 70ஆவது பிறந்தநாளில் பிரதமரின் 'வாழ்க்கை மற்றும் பணி' குறித்த காணொலி மாநாடு ஏற்பாடு செய்யப்படும். இது தொடர்பான 70 ஸ்லைடுகளை சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.