காங்கிரஸ் முன்னாள் தலைவர், வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு மார்ச் முதல் வாரம் வருகைதந்து பொதுக்கூட்டத்தில் பேசுவார் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி நீண்ட நாள்கள் ஆகியும், ராகுல் வருகை குறித்து டெல்லி தலைமை இதுவரை தேதி ஏதும் கொடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி தற்போது வெளியூர் பயணத்தில் இருப்பதால் தேதி எதுவும் கொடுக்கப்படவில்லை என டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது குறித்து டெல்லித் தரப்பிடம் விசாரித்தபோது:
தமிழ்நாடு காங்கிரஸ் விவகாரங்களைப் பேசுவதற்காகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லி வந்திருந்தார். பிப்ரவரி 13ஆம் தேதி வரை டெல்லியிலிருந்த அவர், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், சஞ்சய் தத், முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோரை டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழகிரியால் சந்திக்க இயலவில்லை. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்திப்பின்போது, தமிழ்நாட்டில் சில மாவட்ட தலைவர்கள் மாற்றம், தமிழ்நாடு காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக் குழுவை மாற்றி அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அழகிரி விவாதித்தார்.