ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் சூழலில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து உரிய ஆவணங்களின் இன்றிக் கொண்டு செல்லப்படும் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அதுபோன்று, அரசியல் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், வேட்பாளர்களின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் தேர்தல் பறக்கும்படையினரும், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை அலுவலர்களும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அவரது உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அது எந்தெந்த பகுதி வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பட்டியலும் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டிலும் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தப்பட்டது.