தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ரஷ்யா, அர்மேனியாவில் மருத்துவம் பயின்ற மருந்துவர்களை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அரசிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”ரஷ்யா, அர்மேனியா ஆகிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மருத்துவம் பயின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு வேலையில்லாமல் உள்ளனர்.
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள், இந்தியாவில் மருத்துவராக பணிபுரிவதற்கு இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் வைக்கப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்தத் தேர்வில் பெரும்பான்மையான மாணவர்களால் தேர்ச்சி பெற முடியாததால் ரஷ்யா, அர்மேனியா ஆகிய நாடுகளில் மருத்துவம் பயின்ற பலர், இங்கு மருத்துவர்களின் உதவியாளராக பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில், ரஷ்யா மற்றும் ஆர்மேனியாவில் மருத்துவம் பயின்றவர்களை அரசு மருத்துவம் பார்க்க அனுமதிக்க வேண்டும். தனது தொகுதியான விழுப்புரத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவர்கள் சிலர் ரஷ்யா மற்றும் ஆர்மேனியாவில் மருத்துவம் பயின்றுள்ளனர். அவர்களுக்கு உதவி புரியுமாறு குறிப்பிட்டிருந்தார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அத்தகைய மருத்துவர்களில் ஒருவர், ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "நான் 2017ஆம் ஆண்டு அர்மேனியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் முடித்தேன். இருப்பினும், இந்திய மருத்துவ கழகத்தால் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் 48 விழுக்காடு மதிப்பெண் மட்டுமே பெற முடிந்தது. ஆனால், தேர்ச்சி பெறுவதற்கு 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெறவேண்டியது அவசியம். எனவே, என்னால் ஒரு மருத்துவராக இங்கு பணியாற்ற முடியாமல், மருத்துவரின் உதவியாளராக பணியாற்றுகிறேன்.
நாடே கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், எங்களை போன்ற மாணவர்களுக்கு, அரசு சில தளர்வுகளை வழங்கி , மருத்துவ சேவை செய்ய அனுமதி வழங்கினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் ” என்று கூறினார்.