தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு - இன்று விசாரணை - Supreme court latest news

டெல்லி: தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் திமுகவின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவருகிறது.

Supreme court latest news
Supreme court latest news

By

Published : Feb 4, 2020, 12:55 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 டிசம்பரில் உயிரிழந்த பின், அதிமுகவை அவரது தோழி சசிகலா கைப்பற்றினார். அப்போது, முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், சசிகலாவின் தலைமைக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினார்.

இச்சூழலில், சசிகலா ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் சொகுசுவிடுதியில் தங்கவைக்கப்பட்டனர். அங்கேயே எம்எல்ஏ-க்கள் கூட்டமும் நடத்தப்பட்டு, சசிகலாவின் ஆதரவாளராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த சூழலில் பழனிசாமி அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓ.பி.எஸ் உட்பட 11 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் வாக்களித்தனர். இருப்பினும், எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை கிடைத்தது. பின்னர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கொண்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி, எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவில் இணைந்தது.

இதற்கிடையே, அதிமுக அம்மா அணியை இயக்கிவந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதலமைச்சரை மாற்ற கோரிக்கை விடுத்தனர். இதனால், அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி, 18 எம்எல்ஏ-க்களின் பதவி பறிக்கப்பட்டது.

இச்சூழலில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு 11 எம்எல்ஏ-க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை திமுக நாடியது. ஆனால், சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியதையடுத்து, திமுக தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது.

திமுக தரப்பில் ஆஜராகிவரும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீண்ட காலமாகவே கிடப்பில் இருக்கும் இந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கடந்த 24ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன் முறையிட்டார். அதனை பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி கூறியிருந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதேபோல், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் 2016 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு தொடுத்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: டெல்லி தேர்தல் - இன்று வெளியாகிறது ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை!

ABOUT THE AUTHOR

...view details