டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.பி. நட்டா அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஜே.பி. நட்டாவை டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பாஜக புதிய தேசிய செயல் தலைவருக்கு தமிழிசை வாழ்த்து!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜே.பி.நட்டாவை டெல்லியில் நேரில் சந்தித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழிசை வெளியிட்ட அறிக்கையில், 'ஜே.பி. நட்டா பாஜகவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் உள்ள அவரது நீண்ட அனுபவமும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் கடந்த காலங்களில் இமாச்சல பிரதேச மாநில அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் பாஜக வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலும் கட்சியை மேன்மேலும் பலப்படுத்த உறுதுணையாக இருக்கும். தமிழ்நாடு பாஜக சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுகளும், வரவேற்புகளையும் தெரிவித்துகொள்கிறேன்’ என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.