முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தது.
அப்போது தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், ரங்கசாமி ஆகியோரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் தகுதிநீக்கம் செய்ய கோரிய மனுவின் மீது சபாநாயகர் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதற்கு எதிராக திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் இன்று மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை நீதிபதிகள் 15 நாள்களுக்கு தள்ளிவைத்தனர். முன்னதாக அதிமுக தரப்பில் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என நீதிமன்றத்தில் கூறப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது - ராகுல் காந்தி