மேற்கு வங்க மாநிலம் 24 பாரகான் மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக (எம்.எல்.ஏ) இருந்தவர் தமோனாஷ் கோஷ். இவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் கடந்த மே மாதம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஏற்கனவே அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் இருந்துவந்தது.
இந்நிலையில் அவர் இன்று காலமானார். அவரின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மம்தா இரங்கல்
இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இந்த கடின நேரத்தில் அவரை இழந்து வாடும் அவரது மனைவி ஜர்னா, இரண்டு மகள்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மறைந்த எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி மற்றும் மக்கள் பணியில் இருந்தவர். பால்டா சட்டப்பேரவை தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அன்பழகன்
இதுமட்டுமின்றி கட்சியின் பொருளாளர் பதவியையும் வகித்துள்ளார். பொதுமக்கள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் உயிரையும் இந்த ஆட்கொல்லி வைரஸ் பறித்துவருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் என்பவரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தார்.
அவரும் மூன்று முறை எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவர். மேற்கு வங்க மாநிலத்தில் 4,930 கரோனா பாதிப்பாளர்கள் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 580 ஆக உள்ளது.
இதையும் படிங்க: குஜராத்தில் வங்கி பெண் ஊழியர் மீது காவலர் தாக்குதல்: காணொலி வைரல்!