திருச்சூர்: குருவாயூர் கோயிலில் மூன்று சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த தம்பதியர் பிரேம்குமார் - ரமாதேவி. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். இந்த ஐந்து குழந்தைகளும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். 1995ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நிகழ்ந்த இவர்களின் பிறப்பு, அப்போது கேரளாவில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தக் குழந்தைகள் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ஆகையால் உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா, உத்ரஜன் எனப் பெயரிட்டு வளர்த்தனர். இந்நிலையில், சிறு வியாபாரியான பிரேம்குமார், கடன் பிரச்னையால் 2004-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். ஐந்து குழந்தைகளுடன் இன்னல்களைச் சந்தித்து வந்த ரமாதேவிக்கு கேரள அரசு, கூட்டுறவு வங்கியில் வேலை வழங்கியது.
பெண்களின் திருமண வயதை நிர்ணயிக்க உரிமை உள்ளதா?
இந்த ஐந்து பேருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க ரமாதேவி விரும்பினார். மணமகன் பார்க்கும் படலமும் அறங்கேறியது. இந்நிலையில் உத்ராவுக்கு, அஜின் குமாரும், உத்ரஜாவுக்கு ஆகாஷூம், உதாராவுக்கு மகேஷூம் நிச்சயம் செய்யப்பட்டனர்.
கடைக்குட்டி உத்தமாவுக்கு வினீத் என்பவர் நிச்சயிக்கப்பட்டார். இவர்களின் திருமணம் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்தது. இச்சூழலில் கரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. கரோனா காரணமாக தள்ளிப்போன இந்த திருமணம் அக்டோபர் 25ஆம் தேதி குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் வெகுசிறப்பாக நடந்தது. உத்ரஜாவுக்கு நிச்சயிக்கப்பட்டவர் குவைத்தில் பணிபுரிகிறார். அவரால் தற்போது நாடு திரும்ப முடியவில்லை, அவர் திரும்பியதும் உத்ரஜாவும் திருமண பந்தத்தில் இணைகிறார்.
குருவாயூர் கோயிலில் மூன்று சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது காண்போர் மட்டுமின்றி கேட்போரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.