புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அதிரடி காவல் குழு உருவாக்கப்பட்டு, கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி கதிர்காமம், வழுதாவூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக சிறப்பு அதிரடி படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்றிரவு பெட்ரோல் பங்க் அருகே காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த மூன்று இளைஞர்கள், காவல் துறையினரைக் கண்டதும் தப்பியோடினர். அவர்களை துரத்திச் சென்று காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
சோதனையில் அவர்கள் 13 பிளாஸ்டிக் பைகளில் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது . அவர்களிடம் நடத்திய விசாரணையில், தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த அருண், புதுச்சேரி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பிருத்திவிராஜ், ராஜ்குமார் எனத் தெரியவந்தது.
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ஞானதியாகு பகுதியில் பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 75 கிலோ கஞ்சா பொட்டலங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா பொட்டலங்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து புதுச்சேரி கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.