ஜம்மு:ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லாவேபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று (டிசம்பர் 29) மாலை நடத்திய என்கவுன்ட்டரில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதில் சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் பயங்கரவாதிகள் என பாதுகாப்பு படையினர் தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் குற்றமற்றவர்கள் என அவர்களது பெற்றோர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கூறுகையில், "லாவேபோரா பகுதியிலுள்ள நூரா மருத்துவமனைக்கு எதிராக உள்ள கட்டடத்தில் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் அவர்களை சுட்டுக்கொன்றோம். மேலும் அவர்கள் ஸ்ரீநகரின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்" என்றார்.
இறந்தவர்களை அடையாளம் காணுவதற்காக அவர்களது பெற்றோர், உறவினர்கள் அழைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த அஜாஸ் காணி, அத்தர் முஸ்தப்பா வானி ஆகியோர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சபேர் அகமது லோன் என்பவர் ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.