பீகார் மாநிலத்தின் பட்கி அகோதி கிராமத்தில் நேற்று (ஜூலை 8) இரவு இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கார்கர் காவல் நிலைய எல்லையில் நடந்த சம்பவத்தில், ஒரு பெண்ணுடன் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். சந்திரன்ராம் என்பவர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டிடத்தில் வசித்து வந்துள்ளனர்.
இறந்தவர்கள்- சானி தேவி(35), ஜீது குமார்(5), நைனா குமாரி(4) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சமீபத்தில் ஆபரேஷன் செய்த சந்திரனின் மனைவியை கவனித்துக்கொள்வதற்காக உறவினர் சானி தேவி அவர்களுடன் தங்கியிருந்தார் என அவரது உறவினர் தனஞ்சய் குமார் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு மழை பெய்த பின்னர் கட்டடத்தில் விரிசல்கள் உருவாகியுள்ளன. பின்னர் இதனை பழுதுபார்க்கும் பணியை தொடங்க முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் இந்த விபத்து இரவில் நடந்துவிட்டது.
மேலும் 5-6 மணி நேரத்திற்குள் இடிந்து விழுந்த கட்டிடத்தில் ஏற்பட்ட விரிசல்கள் குறித்து உள்ளூர்வாசிகள் அக்குடும்பத்தினரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் காயமடைந்த சந்திரன் ராம், லால்சா தேவி, அமித் குமார், அஞ்சனி குமாரி, நிதீஷ் குமார், ரித்தேஷ் குமார், ஜனாரதன் வர்மா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.