தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 3, 2020, 3:49 PM IST

ETV Bharat / bharat

வென்டிலேட்டர் தயாரிக்க நாசா தேர்ந்தெடுத்த மூன்று இந்திய நிறுவனங்கள்

வாஷிங்டன்: கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாசா வடிவமைத்த சிறப்பு வென்டிலேட்டர்களை தயாரிக்க மூன்று இந்திய நிறுவனங்களுக்கு நாசா அனுமதி அளித்துள்ளது.

NASA developed ventilator
NASA developed ventilator

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் புதிய வென்டிலேட்டர் ஒன்றை வடிவமைத்துள்ளது. வழக்கமாக பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்களில் உள்ள பாகங்களில் மூன்றில் ஒரு பங்கு பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வென்டிலேட்டர்கள், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

விட்டல் (VITAL) என பெயரிடப்பட்டுள்ள இந்த வென்டிலேட்டரை தயாரிக்க உலகெங்கும் இருந்து 21 நிறுவனங்களை நாசா தேர்ந்தெடுத்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ், பாரத் ஃபோர்ஜ், மேதா சர்வோ டிரைவ்ஸ் ஆகிய நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளின் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உள் துறை பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில்,"கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டுள்ள வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய நாசா தேர்ந்தெடுத்துள்ள மூன்று இந்திய நிறுவனங்களுக்கு வாழ்த்துகள்.

உலகெங்கும் வெறும் 21 நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19க்கு எதிராக போராடும் இந்திய-அமெரிக்க கூட்டாட்சியின் சாட்சி இது" என்று பதிவிட்டுள்ளது.

இது குறித்து ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகத்தின் மேலாளரும், விடல் வென்டிலேட்டரை வடிவமைத்த குழுவின் தலைவருமான லியோன் அல்கலை கூறுகையில், "கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஏதுவாகவும் எளிமையாகவும் குறைந்த விலையில் இந்த வென்டிலேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இடத்திற்கு ஏற்றவாறு இந்த வென்டிலேட்டர்களின் வடிவமைப்பையும் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த தொழில்நுட்பத்திற்கு தற்போது லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த வென்டிலேட்டர் உலகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும். இது கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க உதவும் என்று நம்புகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் நிறவெறி படுகொலை: ஆஸியிலும் படர்ந்த போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details