அஸ்ஸாமில் பெய்துவரும் தொடர்கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் சாக்தோலா ஆற்றில் அபாய அளவு கடந்து பாயும் வெள்ள நீர் மேற்கு மாகாணமான தரங்கில் உள்ள மங்கல்தே மற்றும் சிபாஜர் விதான் சபா பகுதிகளின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
சோனித்பூர், போர்சோலா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிய ஒருவர், "கடந்த ஏழு நாள்களாக எனது வீடு நீரில் மூழ்கியுள்ளது, இருப்பினும் அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. உணவுக்கே வழியில்லாமல், பட்டினி கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.