தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எழுவர் விடுதலை: அமித் ஷாவுடன் திருமா, அற்புதம்மாள் சந்திப்பு - rajivgandhi death

டெல்லி: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அற்புதம்மாள் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ராஜிவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

எழுவர் விடுதலை

By

Published : Jul 29, 2019, 2:04 PM IST

Updated : Jul 29, 2019, 6:40 PM IST

1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, காவல்துறை அலுவலர்கள், பொது மக்கள் என மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை சிறப்புப் புலனாய்வுத்துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

இந்த படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு 27 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் உள்ளதால், இவர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எழுவரின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுத்து கொள்ளலாம், அதில் மத்திய அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏழு பேரின் விடுதலை குறித்து தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநரிடம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன.

இந்நிலையில், அரசியல் சட்டப்பிரிவு 161ன் கீழும், மனிதநேய அடிப்படையிலும் முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றுள்ள ஆளுநர், அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது உரிய காலத்தில் உத்தரவு பிறப்பிக்காமல் தேவையில்லாமல் தாமதப்படுத்தி வருகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மேலும், ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்து அதைத் தமிழக ஆளுநருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே அனுப்பியுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் அந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். தமிழக மக்களின் உணர்வையும், தமக்குள்ள அதிகாரத்தையும் உணர்ந்து ஆளுநர் இதில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என சில நாட்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று விசிக தலைவர் திருமாவளவன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்கான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, பேரறிவாளனின் வழக்கறிஞர், விசிக எம்.பி ரவிக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததால் ஏழு பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்தோம் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அற்புதம்மாள், ஏழு பேரையும் விடுதலை செய்ய 28 ஆண்டுகள் தொடர்ந்து போராடி வருகிறோம் என்றும், உள்துறை அமைச்சரை சந்தித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வந்ததாகவும், இந்த சந்திப்பின் பிறகு ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என நம்புவதாகவும் கூறினார்.

Last Updated : Jul 29, 2019, 6:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details