பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழ்நாட்டில் காவல் துறை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. பாஜகவினர் அநாகரிகமாகப் பேசுவதை காவல் துறை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.
மதவெறிக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும் செயலாகவே இது அமையும். நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகா ஆகியோர் மிரட்டப்படுகின்றனர். இதனை மாநில அரசு அனுமதிப்பது, மதவெறியாட்டத்தின் களமாகத் தமிழ்நாட்டை மாற்றும் பாஜகவின் முயற்சிக்கு அனுமதி அளிப்பது போலாகும்.
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கேட்கும் ஒரே கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெண்களுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறி போராடுகின்றனர். மனுதர்மத்தை காட்டி என்னை அச்சுறுத்த முடியாது” என்றார்.
பெண்களை அவமானப்படுத்தியவர் எய்ம்ஸ் உறுப்பினரா? தொடர்ந்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில், பெண்களை அவமானப்படுத்திய ஒருவரை (மருத்துவர் சுப்பையா ஆறுமுகம்) உறுப்பினராக நியமித்தது கண்டிக்கத்தக்கது. அதனைக் கண்டித்து தங்கள் கட்சி போராடுவதோடு, சட்டரீதியான நடவடிக்கையிலும் இறங்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க: கேரளா தங்க கடத்தல் வழக்கு: அமலாக்கத் துறையினரின் பிடியில் சிவசங்கர்!