வாழ்க்கையில் நேருக்கு நேராக வரும் பல சவால்களை எளிதாக கடந்து போகும் மக்களால், உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறனர். சமீபத்தில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு பயந்து பலர் தற்கொலை செய்கின்றனர். வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று ஏங்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சம்பவத்தை உத்தரப் பிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் நடத்தியுள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சஃபியா ஜாவேத் என்ற சிறுமி, நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் பலவினமாக இருந்ததால் அவ்வப்போது தண்ணீர் நிரப்ப வேண்டிய சூழ்நிலை இருந்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையும் பொருட்படுத்தாமல் 10ஆம் வகுப்பு இறுதி தேர்வுக்கு தன்னை அவர் தயார்படுத்திக்கொண்டார். ஆக்ஸிஜன் கருவியுடனே தேர்வை எதிர்கொண்ட அவர் 69 விழுக்காடு மதிப்பெண் பெற்று பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இதே போல், அதே மாநிலத்தைச் சேர்ந்த சோனம்(17) என்று சிறுமிக்கு மூளையில் உருவான கட்டியை கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். இருப்பினும் நோயின் பாதிப்பு குறைந்தபாடில்லை. அவ்வப்போது தலைவலியும், மயக்கமும் சோனமுக்கு ஏற்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த நோயின் காரணமாக அவரின் உயரமும் பாதிப்புக்குள்ளாக மூன்றடி மட்டுமே உள்ளார். இத்தகைய பாதிப்புக்குள் இருந்தும், விடாமுயற்சியாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 79 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னால் மற்ற மாணவர்கள் மாதிரி நீண்ட நேரம் படிக்க முடியாது. அப்படி படித்தால் தலைவலி ஏற்படுகிறது. நான் இன்னும் சிகிச்சையில்தான் உள்ளேன். தேர்வுக்கு படிப்பது கடினமாகதான் இருந்தாலும் சாதித்துவிட்டேன் " என்றார்.