பாரதிய மட்தாடா சங்கதன் என்ற அமைப்பை பாஜக மூத்தத் தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் நடத்திவருகிறார். இந்த அமைப்பு சார்பாக பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கு ஒன்று டெல்லியில் நடத்தப்பட்டது. இதில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபுல் சந்திர பண்ட் கலந்துகொண்டு பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக உரையாற்றினார்.
அப்போது அவர், "கல்வி மூலம் பொது சிவில் சட்டத்திற்கான தேவையை மக்களிடையே கொண்டு செல்லவேண்டும். அப்போது மக்கள் தெளிவடைந்து, அதனை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் வரும். பிரிட்டிஷார் நிறைவேற்றிய சிறப்பு திருமணச் சட்டத்திற்கு இந்தியாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. மதம் கடந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் இந்த சட்டம் போலவே பொது சிவில் சட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது.
2006ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இஸ்லாமியர்கள் குழந்தைகளை தத்தெடுத்து கொள்ளலாம். ஆனால், தனிச்சட்டத்தில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பாட்னா நீதிமன்றதத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அன்சாரி, "பொது சிவில் சட்டத்தை வரவேற்க வேண்டும். பெண்களுக்கான சொத்துரிமை மூன்றில் ஒரு பங்கிலிருந்து, பாதியாக உயர்த்தப்பட்டது. இதுபோல், தனிச்சட்டத்தில் எந்த மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதை மக்கள் ஆராய வேண்டும். மாற்றத்திற்கு எதிர்ப்பு இருக்கும். தனிச்சட்டத்திற்குள்ளே மாற்றம் செய்வதில் மாற்றம் கொண்டு வரவேண்டும்" என்றார்.
அலகாபாத் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கான், "பொது சிவில் சட்டம் ஒரு புதுமையான யோசனை. பாலின சமத்தும், பெண்களின் கண்ணியம் ஆகியவையில் பொது சிவில் சட்டம் பெரிய பங்காற்றும். அனைவருக்கும் நீதி வழங்க உதவும்" என்றார்.
பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து, பலர் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசை உத்தரவிடும்படி மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை டிசம்பர் 9ஆம் தேதி நீதிமன்றம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளவுள்ளது.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்!