மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நீடிப்பதில் தற்போது சிக்கல் நிலவிவருகிறது. ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததையடுத்து அங்கு சிந்தியா ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா கடிதத்தை அவைத்தலைவர் என்.பி. பிரஜாபதிக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்த அங்கு காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்துவிட்டது எனக் கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அம்மாநில ஆளுநர் லால்ஜி தாண்டனுக்கு பாஜக கடிதம் எழுதியது. கரோனா பாதிப்பின் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போது மேற்கொள்ள இயலாது என அவைத்தலைவர் தெரிவிக்க, விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது பாஜக.
இது தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆட்சியைத் தக்கவைக்க அரசு இறுதிகட்ட முயற்சியில் களமிறங்கியுள்ளது.