இந்தியாவில் கோவிட்-19 நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில், அந்நோயின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற முன்னணியில் நின்று பணியாற்றி வரும் காவல் துறையினருக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தேவ்தட் காமத், "காவல் துறையினருக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக ராஜஸ்தான், ஒடிசா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் 55 வயதுக்கும் அதிகமான காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது" என வாதாடினார்.
காவல் துறையினருக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரிய மனு - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி இதற்குப் பதிலளித்த நீதிமன்றம், இதுபோன்ற கொள்கை முடிவுகளை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
எனினும், இதுகுறித்து மாநிலங்களிடம் முறையிட அனுமதி அளிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாது - தமிழ்நாடு அரசு