மூன்று முறை முதலமைச்சராக இருந்த உங்கள் தாயார் ஷீலா தீக்ஷிதுக்குப் பின், சில காலம் உங்களைத் தீவிர அரசியலில் பார்க்க முடியவில்லையே ஏன்?
சில காலம் நான் டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது உண்மைதான். அதுகுறித்து இப்போது பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதேவேலை, காங்கிரசில் தலைமை பொறுப்புக்கான சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாகவே நான் கடந்த ஐந்து வருடங்களாக ஒதுங்கியிருந்தேன். ஷீலா தீக்ஷித் அவர்கள் மாநிலத் தலைவராக வந்தபோது, நான் அவருக்கு உதவிகரமாக இருந்தேன். அதன்பின்னர், காங்கிரஸ் வளர்ச்சிக்கு என்னுடைய பொதுப்பணியை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறேன்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தைக்கூட கைப்பற்றவில்லை. இம்முறையும் கட்சியின் நம்பிக்கையுடன் களத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?
கடந்த சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கட்சிக்குப் பின்னடைவைத் தந்தது உண்மைதான். அதேவேலை 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்களின் செயல்பாடுகள் முன்னேற்றத்தைத் தந்துள்ளது. ஷீலா தீக்ஷித்தின் மறைவு கட்சிக்கு பேரிழப்பு. இரு பெரும் சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆம் ஆத்மி, பாஜக கட்சிகளைப் போல் எங்களுக்கு பலம் இல்லை.
ஆம் ஆத்மி கட்சி சுமாரான ஆட்சியைத் தந்துவிட்டு, ஊடகங்களில் பொய் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றன. முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் சிசோடியா இருவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது போல் கருத்து பரப்பிவருகின்றனர். ஷீலா தீக்ஷித் ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வி, போக்குவரத்து ஆகியவை சிறப்பாக செயல்பட்டுவந்தது என்பதே உண்மை.
இருப்பினும் காங்கிரஸ் பரப்புரை கவர்ச்சியற்றுக் காணப்படுவது ஏன்?
நாங்கள் ஊடக விளம்பர வெளிச்சத்தை பெரிதும் விரும்பவில்லை. ஷீலா தீக்ஷித் தலைமையிலான ஆட்சியின்போது பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரத்தை ஒருபோதும் தந்ததில்லை. அதேவேலை, கெஜ்ரிவல் அரசு இரண்டு நாளைக்கு ஒரு முறை, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தி பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துவருகிறது. காங்கிரஸ் தங்களின் தொண்டர்கள் மூலம் மக்களை எதிர்கொள்கிறது. ஊடக வெளிச்சம் ஆம் ஆத்மிக்கு அதிகம் இருப்பதால் எங்கள் பரப்புரை வெளிப்படவில்லை.
காங்கிரஸ் தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காதது ஏன்?
காங்கிரஸ் தனது முதலமைச்சர் வேட்பாளரை ஒருபோதும் அறிவித்தது இல்லை. காங்கிரஸ் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே பின்பற்றும் கட்சி, அதிபர் முறையிலான தேர்தலில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. கடந்த 2003, 2008ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் கூட ஷீலா தீக்ஷித் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை.