தேக்கடி (கேரளா):தேக்கடி படகு சவாரி, ஆறு மாதத்திற்குப்பின், நேற்று (செப்டம்பர் 5) மீண்டும் தொடங்கியது.
கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான தேக்கடியில், அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் உள்ள ஏரியில், படகு சவாரி செய்த படி வன விலங்குகளை கண்டு ரசிப்பது சிறப்பு. சுற்றுலாப் பயணிகளுக்காக, கேரள வனத் துறை, சுற்றுலாத் துறை சார்பில், 10 படகுகள் உள்ளன. கரோனா பரவலை தடுக்க மார்ச் 23ஆம் தேதி படகு சவாரி நிறுத்தப்பட்டது.
வனப்பகுதியில் மலை ஏற்றம், யானை சவாரி உள்ளிட்டவையும் மூடப்பட்டன. சமீபத்தில் இடுக்கி மாவட்டத்தில், பல சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு மாதத்திற்குப்பின் தேக்கடியில் படகு சவாரி தொடங்கியுள்ளது. நேற்று படகுகள் பராமரித்து இயக்கி பார்க்கப்பட்டன.
மேலும், 50 விழுக்காடு இருக்கைகள், முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் தேக்கடி படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நாளொன்றுக்கு ஐந்து முறை நடைபெற்று வந்த படகு சவாரி, கரோனா நோய் பரவலால், தற்போது குறைக்கப்பட்டு காலை 9:30 மணி, மாலை 3:30 மணிக்கு என இரண்டு முறை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
அதுமட்டுமின்றி படகு சவாரிக்கு நபர் ஒன்றுக்கு 250 ரூபாயாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அது 50 விழுக்காடு உயர்த்தப்பட்டு தற்போது 385 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இதனால் தேக்கடியில் படகு சவாரி செய்வதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.