புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வங்கிகளிலிருந்து பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு, அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வண்ணம் அரிப்பு பொடி துாவி பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகாபுரத்தைச் சேர்ந்த சாந்திமதி என்பவர் மீது அரிப்பு பொடி தூவி நுாதன முறையில் ரூ.6 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
கொள்ளை கும்பலின் தலைவன் கைது இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நுாதன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் திருச்சியில் நான்கு நாட்கள் முகாமிட்டு, கொள்ளை கும்பலின் தலைவனான முருகானந்தம் என்ற இளைஞரை கைது செய்தனர்.
கைதானவரிடமிருந்து நான்கு லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து காலாப்பட்டிலுள்ள மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், பிடிபட்ட முருகானந்தம் மீது தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.