புதுச்சேரி அரசுப்பள்ளிக் கல்வி இயக்ககம், சமகர சிக்ஷா மனிதவள மேம்பாட்டு கழகத்தின் உதவியுடன் ’வானவில் 2020’ நிகழ்ச்சி கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. இவ்விழாவில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரங்கோலி, பட்டம் செய்தல், கைவினைப் பொருள்கள் செய்தல், தற்காப்புக் கலைகள், சிலம்பாட்டம், இசைக்குழு அணிவகுப்பு, பாரம்பரிய உடை அணிவகுப்பு, பொம்மலாட்டம், இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற நடனம் முதலிய போட்டிகள் நடைபெற்றன.
மேலும் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசித்தல் திருவிழா, மழலைப் பாடல்கள், கதை சொல்லுதல், மெல்லிசை, இசைக்கருவி மீட்டல், தனி நடனம், ஆசிரியர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சி, பேச்சுப் போட்டி, பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் கல்வித் தொடர்பான ஸ்டால்களும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.