அஸ்ஸாமில் வெள்ளத்தில் சிக்கி பல வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. இந்த நிலையில், லவ்கோவா புர்ஹாச்சபோரி வனவிலங்கு சரணாலயத்தில் புதிதாக பிறந்த இரண்டு புலிக்குட்டிகளின் புகைப்படம் வெளியாகி வனவிலங்கு ஆர்வலர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட இடத்தில் புலிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் ஆதாரங்கள் முதல்முறையாக வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சரணாலயத்தின் ட்விட்டர் பக்கத்தில், "புலியின் உறுமல் சத்தம் அதிகரித்துள்ளது. லவ்கோவா புர்ஹாச்சபோரி வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது குறித்து கேமரா ஆதாரங்கள் முதல்முறையாக வெளியாகியுள்ளது. 15 ஆண்டுகாலமாக புலிகள் இனப்பெருக்க சூழலை உருவாக்கியதன் விளைவாக இது நடந்துள்ளது" என பதிவிடப்பட்டுள்ளது.