உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் 1,535 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக அம்மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது.
கடந்த 25ஆம் தேதியிலிருந்து ராஜஸ்தானில் பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அம்மாநில அரசு ஊரடங்கிற்கு உத்தரவிட்டது. வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வேகமாக முன்னெடுத்துவருகிறது.
இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்து வந்த தொற்றுநோய் பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் இரண்டாம் கட்ட ஆபத்து நிலையை அடைந்திருக்கிறது. அம்மாநிலத்தில் 12 மண்டலங்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் சிவப்பு குறியீட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதியன்று ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், மாநில அரசுகள் சில தளர்வுகளை நடைமுறைப்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தொழில் நிறுவனங்களுக்கு இன்று (ஏப்ரல் 20) முதல் இயங்க சில புதிய வழிகாட்டுதல்களை ராஜஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. இதன் கீழ் தொழில்கள், அரசு அலுவலகங்கள், முக்கியமான கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தளர்வுடன் இதற்கு இசைவு அளித்தாலும் கட்டுப்பாடுகள் முன்பை விட அதிக கண்டிப்புடன் இருக்குமென அறிய முடிகிறது.
இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு வெளியிடுள்ள உத்தரவில், “ஊரடங்கு தளர்வின் போது சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டுமெனவும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது.