புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திருநள்ளாறு வந்தடைந்தார். அவருக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா ஆகியோர் மலர்செண்டு கொடுத்து வரவேற்பளித்தனர். இதனைத்தொடர்ந்து திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயத்தில் அரை மணிநேரம் தரிசனம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.
அவரது வருகையையொட்டி, காரைக்கால் திருநள்ளாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதுச்சேரி, மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கையெழுத்திட்ட நிலையில், குடியரசுத் தலைவர் காரைக்காலுக்கு வருவதால் காரைக்கால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா உத்தரவிட்டிருந்தார்.