தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2020, 10:20 AM IST

ETV Bharat / bharat

இந்தியப் பொருளாதாரத்தில் இளைஞர்களின் ஆற்றல்

நாட்டின் எதிர்காலத்திற்கான புதுக் கண்டுபிடிப்பாளர்கள், படைப்பாளர்கள், கட்டமைப்பாளர்கள், தலைவர்கள் என இளைஞர்களே எல்லாமும் ஆவர். இது எப்போது சாத்தியம் என்றால் அவர்கள் தங்களுக்கான சரியான கல்வி, திறன்கள், நல்ல சுகாதாரத்தைப் பெறும்போது மட்டுமே அந்த மாற்றம் நிகழும்.

The power of youth on Indian economy
The power of youth on Indian economy

ஐநா மக்கள்தொகை நிதியம்

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 60 கோடி பேர், அதாவது மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், இப்போதைய நிலையில் 25 வயதுக்கு குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். இந்த 60 கோடி பேர்தான் நம்முடைய உலகத்தை மாற்றியமைக்கக் கூடிய இடத்தில் இருக்கின்றனர்.

உலகளவில், தற்போது 10 முதல் 24 வயதுக்குள்பட்ட இளம் வயதினர் 1.8 பில்லியன் பேர் இருக்கிறார்கள். உலகத்திலேயே அதிகமான இளைஞர் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இங்கு, இந்த வயது பிரிவில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 35.6 கோடி பேர் ஆவர்.

சீனா 26.9 கோடி பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, 6.7 கோடி பேருடன் இந்தோனேசியாவும், 6.5 கோடி பேருடன் அமெரிக்காவும், 5.9 கோடி பேருடன் பாகிஸ்தானும், 5.7 கோடி பேருடன் நைஜீரியாவும், 5.1 கோடி பேருடன் பிரேசிலும், 4.8 கோடி பேருடன் வங்கதேசமும் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. இது, ஐநா மக்கள்தொகை நிதியத்தின் அறிக்கைப்படியான புள்ளி விவரம் ஆகும்.

இந்தியப் பொருளாதாரத்தில் இளைஞர்களின் ஆற்றல் 6

மதிப்புவாய்ந்த இந்திய இளைஞர்கள்

இப்போது அதிவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருப்பதால், உலக அளவில் 19 விழுக்காடு இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் இந்த இளைஞர்கள்தான் மிகவும் மதிப்புவாய்ந்த சொத்தாகவும் உறுதியான திரட்சியாகவும் விளங்குகிறார்கள்.

இது, இந்தியாவுக்குத் தனித்துவமான சாதகத்தை வழங்குகிறது. ஆனால், மானுட மூலதன வளர்ச்சியில் உரிய முதலீடு செய்யாவிட்டால் இந்த வாய்ப்பானது பலனளிக்காமல் போகலாம்.

அதி விரைவான பொருளாதார, சமூக மற்றும் நுட்பவியல் நகர்வுகளுக்கு இந்தியா ஆட்பட்டிருப்பதால், நாட்டின் வளர்ச்சியானது சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மேம்பாட்டில் இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க முடிந்தால்தான், இந்த இலக்கை இந்தியா உணர்ந்துகொள்ள முடியும்.

இளைஞர்களின் ஆற்றல்

ஆனால் தீவினையாக இந்திய மனித உழைப்பில் 2.3 விழுக்காட்டினருக்கு மட்டுமே கல்வியும் அதன்பின் முறைப்படியான பயிற்சியும் இருக்கிறது. 20 விழுக்காட்டிற்கும் குறைவான இந்தியப் பட்டதாரிகளே நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய நிலையில் இருக்கின்றனர். மீதமுள்ள 80 விழுக்காட்டினர் தொழில்துறையினரால் வேலையில் அமர்த்த மறுக்கப்படுவோராகவே உள்ளனர்.

இந்தியப் பொருளாதாரத்தில் இளைஞர்களின் ஆற்றல் 4

2019ஆம் ஆண்டில் உலக அளவிலான உள்நாட்டு மொத்த உற்பத்தி தரவரிசையில் இந்தியா ஆறாவது இடத்தில் இடம்பெற்றது. உலகத்தின் இளைஞர் தொகையில் 19 விழுக்காட்டை பெற்றிருந்தும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று விழுக்காட்டை மட்டுமே உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கிறது.

பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவுக்கு உலக மொத்த இளைஞர் தொகையில் மூன்று விழுக்காடு மட்டுமே உள்ளபோதும், அந்த நாடானது உலக மொத்த உற்பத்தியில் 25 விழுக்காட்டை சாதித்துக் காட்டுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தில் இளைஞர்களின் ஆற்றல் 5

இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள சீனாவில் 15 விழுக்காடு இளைஞர் தொகையே உள்ளபோதும் அதனால் உலக மொத்த உற்பத்தியில் 16 விழுக்காட்டை உற்பத்திசெய்ய முடிகிறது. இந்தப் புள்ளி விவரமானது, இந்திய இளைஞர்களுக்கு உள்ள உண்மையான ஆற்றலுக்கும் உலக அளவில் அவர்களால் சாதிக்கப்படக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான பெரும் இடைவெளியை துல்லியமாகக் காட்டுகிறது.

நடப்பு நிலவரம்

உலகளவில் திறன் பற்றாக்குறையில் இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியா 64 விழுக்காடு திறன் பற்றாக்குறையை எதிர்கொண்டுவருகிறது. 2014 பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி.) அறிக்கையின்படி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா 24 விழுக்காடுடன் பட்டியலில் கடைசிக்கு அருகில் இருக்கிறது.

லிங்ட் இன் வெளியிட்டுள்ள 2020இல் இந்தியாவில் உருவாகும் வேலைவாய்ப்பு அறிக்கையின்படி, தற்போதைய சந்தையில் புதிய வகை வேலைகள் தோன்றியிருக்கின்றன.

  • பிளாக் செயின் நிரலாளர்கள்,
  • செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள்,
  • ஜாவாஸ்கிரிப்ட் மென்பொருள் நிரலாளர்,
  • இயந்திர மனிதச் செயற்பாட்டு தானியக்க ஆலோசகர்,
  • வெளிமுனை நிரலாளர்,
  • வளர்ச்சி மேலாளர்,
  • பகுதி நம்பக மேலாளர்,
  • வாடிக்கையாளரை வெல்லும் வல்லுநர்,
  • இயந்திர மனிதப் பொறியாளர்,
  • இணையப் பாதுகாப்பு வல்லுநர்,
  • பைத்தான் மொழி நிரலாளர்,
  • இணையச் சந்தைப்படுத்தல் வல்லுநர்,
  • வெளிமுனை பொறியாளர்கள்

போன்ற பணிகள் விரைவாக உருவாகிவருகின்றன.

லெட்ஜர், சாலிடிட்டி, நோட்.ஜெஎஸ், திறன் தொடர்பு, இயந்திரக் கற்கை, ஆழக்கற்கை,டென்சர்ஃப்ளோ, பைத்தான் நிரல்மொழி, இயற்கை மொழிச் செயற்பாடு போன்ற திறன்கொண்டவர்களையே இப்போதைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் தேடுகின்றன.

புதிய நுட்பத் திறன்

கடந்தாண்டு இன்போசிஸ் வெளியிட்ட ‘திறன் ராடார் அறிக்கை’யானது, இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான ஐந்து நுட்பமான திறன்களைப் பட்டியலிட்டு இருந்தது. அவை:

  1. பயனாளர் அனுபவம் [எண்ம (டிஜிட்டல்) முனைவுகளில் 67 விழுக்காடு],
  2. பகுப்பாய்வுத் திறன் [67 விழுக்காடு],
  3. தானியக்கம் [61 விழுக்காடு[,
  4. தகவல் நுட்பக் கட்டுமான கலை [கிளௌட் உள்பட 59 விழுக்காடு],
  5. செயற்கை நுண்ணறிவு [58 விழுக்காடு]

வெளிப்படையாகப் பேசினால், நம் நாட்டில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் தொழில்நுட்பப் பொறியியல் கல்விக் கழகத்திலும் இந்தத் திறன்கள் கற்பிக்கப்படுவதில்லை. இக்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை.

தகவமைத்துக் கொள்வது தேவை

இதனால், உலகமயமான இன்றைய போட்டித்தன்மையுடைய வேலைவாய்ப்புச் சந்தையில் இளைஞர்கள் தொழில்நுட்பப் பணிகளுக்குப் பொருத்தமானவர்களாக ஆகிறார்கள். வகுப்பறை அறிவு, திறனுக்கும் உலகமய தொழில்துறைத் தேவைகளுக்குமான இடைவெளி நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது.

இதற்கு முதலில் சரியான ஆசிரியர்கள் அமைய வேண்டும்; இந்தவகை புதிய நுட்பத் திறன்களைக் கல்வி நிறுவன வளாகத்துக்கு உள்ளேயே பயிற்றுவிக்க தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்த இடைவெளியை நிரப்ப முடியும்.

இந்தியப் பொருளாதாரத்தில் இளைஞர்களின் ஆற்றல் 3

தொழில் துறைகளைத் தாண்டி நிறுவனங்கள் தேடிக் கண்டுபிடிக்க சிரமப்படும் இந்த புதிய நுட்பத் திறன்களுக்கு, வர்த்தகத்தை எண்மமயமாக்குவதே உடனடித் தேவை. தானியக்கத்தாலும் செயற்கை நுண்ணறிவாலும் 2025ஆம் ஆண்டுக்குள் 7.5 கோடி வேலைகள் முற்றாக ஒழிக்கப்படும் என்றாலும், புதிதாக 13.3 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்பது உலகப் பொருளாதார மன்றத்தின் கணிப்பு.

ஆகையால், புதிய வாய்ப்புகளைப் பற்றிக் கொள்வதற்கு ஏற்ப இளைஞர்கள் புதிய திறன்களில் தம்மை தகவமைத்துக் கொள்வது, இப்போது முதன்மையானதாக முன்னிற்கிறது.

மூலவுத்தி சட்டகமும் செயல்பாட்டுத் திட்டமும்

இந்தியக் கல்வி அமைப்பானது ஏராளமான இளைஞர்களை வேலையற்றவர்களாக ஆக்குகிறது. கல்லூரிக்கு அடுத்து போட்டியான சந்தையை எதிர்கொள்ளும் அளவுக்கு திறன்கொண்டவர்களாக அவர்களை உருவாக்குவதில்லை. திறன் மதிப்பீட்டு நிறுவனமான இந்தியாவின் ’ஆஸ்பையரிங் மைண்ட்ஸ்’இன் ஓர் ஆய்வானது, தற்போதைய அறிவுப்பொருளாதாரத்தில் 80 விழுக்காடு இந்தியப் பொறியாளர்கள் வேலையில் அமர்த்தப்பட முடியாத நிலையில் உள்ளனர் என்கிறது.

ஏ.சி.சி.ஐ.ஐ. அமைப்பின் ஓர் ஆய்வோ, இந்தியாவின் வர்த்தகக் கல்விப் பட்டதாரிகளில் ஏழு விழுக்காடு பேர்தான் வேலையில் அமர்த்தப்படக்கூடியவர்களாக இருந்தனர் என்கிறது. 2018இல் இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களின் அளவு 10.42 விழுக்காடு. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வேலையில்லா இளைஞர்களின் அளவு 10 விழுக்காடு என்னும் புள்ளிக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது.

  • தொழிற்பயிற்சி நிலையங்களை மறுசீரமைத்தது,
  • தொழிற்சாலைகளின் வழிகாட்டலில் திறன் வளர் குழுக்களை நிறுவியது,
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியது,
  • இந்தியத் திறன் இயக்கத்தைத் தொடங்கியது,
  • தொழில்முனைவை ஊக்குவிக்க ஸ்டாட் அப் இந்தியா திட்டம்

போன்ற இந்திய அரசின் முயற்சிகள் சரியான திசையில் செல்லும் நல்ல அறிகுறிகள் ஆகும்.

மத்திய அரசின் நிதியமைச்சர் தாக்கல்செய்த 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், இந்தியாவின் உயர்கல்வி நிலை மாற்றத்தை இலக்குவைத்து ஒரு புதிய தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டுவருவதற்கான அறிவிப்பு முதன்மையானதாக இடம்பெற்றது.

வேலைவாய்ப்பு என்கிற புள்ளியில், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய அவரவருக்கு தொடர்புடைய திறன்களை வழங்குவதில் கவனம் செலுத்துவது என்பது அரசின் நோக்கமாக அமைந்தது.

  • செயற்கை நுண்ணறிவு,
  • இயந்திரமனிதத் துறை,
  • மொழிப்பயிற்சி,
  • பொருள்களின் இணையம்,
  • முப்பரிமாண அச்சாக்கம்,
  • மெய்நிகர் உலகம்,
  • பெருந்தரவு

ஆகிய துறைகளில் மாணவர்களைப் பயிற்றுவிக்க புதிய பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த நவீன காலத் திறன்கள் உள்நாட்டிலோ அல்லது அயல் நாடுகளிலோ வேலையைப் பெறுமளவுக்கு இந்திய இளைஞர்களைத் தயார்செய்யும்.

ஆரோக்கியமான இளைஞர்களே சக்தி

இந்திய இளைஞர்களுக்கு இன்னும் கூடுதலான வழிகாட்டலும் வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனையும் தேவைப்படுகிறது. ஏனென்றால் பொருத்தமான வேலைவாய்ப்புகளைக் கண்டறிவதில் அவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

51 விழுக்காட்டினர், அவர்களுடைய திறனுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடியவையாக இருந்தாலும் அதைப் பற்றி அறிந்துகொள்ளாத நிலையில் இருக்கிறார்கள்; இது ஒரு குறிப்பிடத்தக்க தடையாகும். ஏறத்தாழ 30 விழுக்காட்டினர், எந்த வகையான ஆலோசனைக்கோ வழிகாட்டல் வசதிகளுக்கோ வாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளனர்.

உலகளாவிய இளையோர் மனச்சோர்வு பாதிப்பில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இளைஞர்களில் நான்கில் ஒருவர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகின்றனர். 2019 மும்பை இந்தியா டுடே விவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அதாவது, ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருவர் எனும் அளவுக்கு உள்ளது. இளைஞர்களுக்கான மனச்சோர்வைக் கண்டறிவதும் சிகிச்சை அளிப்பதும் சிரமமான காரியமும்கூட. இந்திய இளஞர்களில் ஐந்தில் ஒருவருக்கு மிகை ரத்த அழுத்தம் இருக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தில் இளைஞர்களின் ஆற்றல் 2

பிரிட்டனின் மொத்த மக்கள்தொகையைவிடக் கூடுதலாக, 8 கோடி பேருக்கு இந்தப் பாதிப்பு காணப்படுகிறது. இந்த நலச் சிக்கல்களில் உடனடியாகத் தலையிட்டு சரிசெய்ய வேண்டும்; ஏனென்றால் இவைதான் நாட்டின் இளைஞர்களின் ஆற்றலை அழிக்கும் தன்மை கொண்டவை. ஆகையால், கல்வியின் தரத்துடன் இளைஞர்களின் நலச் சிக்கல்கள், அவர்களின் திறன் மேம்பாடு ஆகியவை குறித்தும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான இளைஞர்களே நாட்டின் உண்மையான சக்தி.

இந்திய இளைஞர்களின் மேம்பாடு என்பதில், கிராமப் பகுதிகளில் வசித்துவருகின்ற இளம் வயதினரின் எண்ணிக்கையையும் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களில் பெண் மாணவர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

தொழில்நுட்பத் திறன் வளர்த்தல்

இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் செயல்போக்கில், கிராமப்புற மாணவர்கள், பெண் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் நலம் தொடர்பான சங்கதிகளுக்கு தனித்தனியான யுக்திகள் வகுக்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள வெவ்வெறு பிரிவினரின் சிக்கல்களைக் கையாள பொதுவான ஒரே யுக்தி பயன்படாது. இத்துடன் மட்டுமின்றி, இளைஞர்களுக்கு உள்ளேயே பல்வேறு உள்நிலைக் குழுக்கள் உள்ளதை கருத்தில்கொள்ள வேண்டும்.

இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதில் நுட்பமானது ஒரு மிக முக்கியமான பங்கை ஆற்றுகிறது. இப்போது உலகமே இணையத்திலும் செல்பேசித் தகவல்தொடர்பிலும்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் இணையவசதி கிடைக்க வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஆகும்.

இப்போதைய தலைமுறை கணினிகள், மடிக்கணினிகள், ஐ-பாடுகள், திறன்பேசிகளுடன் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பதால், கல்வி அமைப்பிலும் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

இணைய வழங்கிகள், தரவு மையங்கள், கணிமை வசதிகள், கண்ணாடி செயற்கையிழை வலைப்பின்னல், இணைய அலைக்கற்றைத் திறனின் வேகம், செயற்கைக்கோள் தகவல்தொடர்பு ஆகியவற்றில் அரசு அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். இளைஞர்களின் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்தெடுப்பதில் அவர்களுக்குத் துணைபுரியவும் அவற்றை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அவர்களை பயன்படுத்தவும் இது ஓர் அறிவார்ந்த எண்ணக்கருவாகும்.

நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி.களின் மாணவர்களைக் கொண்டு, தேசிய அளவில் சிக்கலுக்குத் தீர்வுகாணும் வழிகாட்டல் குழுக்களை அமைப்பது என்பதை பலரும் தீவிரமாக வலியுறுத்துகின்றனர்.

இந்தக் கல்விக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் இந்தியாவின் உயர்நிலையில் இருப்பவர்கள். ஆகையால், நாடளவில் சமூகத்தில் திரண்டு வரக்கூடிய சில கொந்தளிக்கும் விவகாரங்களையும் சிக்கல்களையும் கையாளுவதற்கும் தீர்ப்பதற்கும் இவர்களின் இப்போதைய ஆற்றலைப் பயன்படுத்துவது என்பது சிலரின் நோக்கம்.

சவால்களை எதிர்கொள்ள வேண்டும்

விவகாரங்களையும் சிக்கல்களையும் ஒருங்கே கொண்டுவரவும் அவற்றை இந்த மாணவர்கள் முன்னால் வைப்பதன் மூலம் அவர்கள் அவற்றைப் பற்றி சிந்திக்கவும் பகுத்தாயவும் மிகப் பயனுள்ளவகையில் தீர்வளிக்கவும் முடியும். கல்விசார் மதிப்பீடுகளில் இவற்றுக்கும் சேர்த்து சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கோ அல்லது மாணவர் குழுவினருக்கோ கூடுதல் மதிப்பெண்களை அளிக்கவும் முடியும்.

இந்தக் கல்விக்கழகங்கள் மட்டுமல்லாமல், இந்த முறையை அடுத்தகட்டமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலுமாக நாடு முழுவதுமுள்ள மாணவர்களிடம் எடுத்துச்செல்ல முடியும். அதன்மூலம் இளைய தலைமுறையினரை முன்கூட்டியே நாட்டில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து சிந்திக்கச் செய்யமுடியும். இந்த முறையின் மூலம் தேசக் கட்டுமானத்திலும் மேம்பாட்டிலும் இளைஞர்கள் தாமாகவே ஈடுபடுத்திக்கொள்ள முடியும்.

பணியிடங்களில் இயந்திரங்களின் இருப்பானது உலகம் முழுவதும் கட்டாயமானதாகவும் வேகமாக அதிகரித்துவருகிறது. உலகம் முழுவதுமாக வேலையில் அமர்த்தப்பட்டுள்ள தானியங்கி சாதனங்களின் எண்ணிக்கை 2015இல் 4.9 பில்லியனாக இருந்தது. 2020இல் 25 பில்லியனாக அதிகரிக்கும் என்று கார்ட்னர் மதிப்பிட்டு இருக்கிறது.

ஆகையால், வருங்காலத்தில் இந்த இயந்திரங்களுடன் சேர்ந்து வேலைசெய்வதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக வேண்டும். இதற்கு, ஆரம்ப நிலைக் கல்வியிலும் இடைநிலையிலும் சிறு இயந்திர மனிதப் பட்டறைகளை அறிமுகப்படுத்துவது பயனுடையதாக இருக்கும்.

இந்தியப் பொருளாதாரத்தில் இளைஞர்களின் ஆற்றல் 1

நாட்டிலுள்ள இளைஞர்களிடம் வாழும் காலம்வரை கற்றுக்கொண்டே இருப்பது எனும் கோணத்திலான பார்வையை மனதில் வளர்த்தெடுக்க வேண்டும். உலகமயமான சூழலில் விரைவாக மாறிக்கொண்டேவரும் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்கள் தங்களை திறனைப் பெறவும் அவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் இது உதவும்.

ஆரம்ப நிலைக் கல்வியில் அவர்களின் ஆற்றலையும் திறனையும் வளர்த்தெடுப்பதில் பெற்றோரும் ஆசிரியரும் எந்த அளவுக்கு ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறார்கள். இது, பெற்றோர், ஆசிரியர் இருதரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் சாத்தியம். தொடக்கக் கல்வியில் ஆசிரியர்கள் மட்டும் அவர்களின் ஆற்றலை வளர்த்தெடுப்பதில் ஒட்டுமொத்தமாக பங்கு வகித்துவிட முடியாது.

பெற்றோரின் பொறுப்புணர்வும் முக்கியத்துவமும் இந்தக் காலகட்டத்தில் கூடுதலாக இருக்க வேண்டும். இடைநிலை, உயர் கல்வியில் ஆசிரியர்களின் பங்கானது நாட்டிற்கு மிகவும் ஆக்கப்பூர்வமானது ஆகும். இதற்கு, ஆரம்ப நிலைக் கல்வி, இடைநிலை, உயர் நிலைக் கல்வியில் அனைத்து நிலைகளிலும் ஆசிரியர் குழுக்களில் உளவியலாளர்களையும் மாணவ ஆலோசகர்களையும் சேர்க்கவேண்டியது கட்டாயம்.

இதையும் படிங்க: இந்திய விவசாயத்தின் அடுத்த கட்டம் - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

ABOUT THE AUTHOR

...view details