2018 செப்டம்பர் 1ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.பி.பி. வங்கியில் இதுவரை தபால் சேமிப்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சுமார் 2.8 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வெகு மக்கள் பயன்படுத்தும் வகையில் மிக மலிவான சேவை கட்டணங்களுடன், எளிதாக அணுகத்தகுந்த வங்கியைக் கட்டமைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
இவ்வங்கியில் தமிழ்நாட்டில் மட்டும் செப்டம்பர் 2019 வரை 5,76,200 சேமிப்பு கணக்குகளும், 1,850 நடப்பு கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இவ்வங்கிக்கு 635 கிளைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய தபால் நிலைய வலைப்பின்னலை அடித்தளமாகக் கொண்டு இதைக் கட்டமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இந்தியத் தபால் துறையிடம் 1,55,933 அலுவலகங்கள் இந்திய முழுவதும் உள்ளன. சுமார் 2.5 லட்சம் தபால்காரர்கள் உள்ளனர். இவர்களை இந்த வங்கி பயன்படுத்த முடியும். இந்தியாவில் 1.5 லட்சம் வணிக வங்கி கிளைகள் உள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகிறது. இந்தியத் தபால் துறையில் சுமார் 1.6 லட்சம் மையங்கள் உள்ளன. அனைத்து தபால் சேவை புள்ளிகளும் ஐ.பி.பி.பி. வங்கியுடன் இணைக்கப்பட்டால் நாட்டின் மிகப்பெரிய வங்கி சேவையாக மாறி ஒரு நல்ல வணிகத் திட்டமாக உருவெடுக்கும்.
இந்த ஆண்டு ஜூலையில் இந்த வங்கிக்கு ஷெட்யூல்ட் வங்கி அந்தஸ்தை ரிசர்வ் வங்கி அளித்தது. (ஷெட்யூல்ட் வங்கிகள் என்பவை ரிசர்வ் வங்கி விதிக்கும் சில நிபந்தனைகளைச் செயல்படுத்தி ஷெட்யூல்ட் அந்தஸ்து இல்லாத வங்கிகளுக்கு அளிக்கப்படாத சில சிறப்புரிமைகளைப் பெறுபவை ஆகும்). இந்த புதிய அந்தஸ்தினால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெறும் உரிமையை ஐ.பி.பி.பி. வங்கி பெறும். ஆனால் இந்த வங்கி தம் வாடிக்கையாளர்களுக்குக் கடன் மற்றும் கடன் அட்டைகளை வழங்க முடியாது.