கட்டுரையாளர் காவேரி பம்சாய் ’இந்தியா டுடே’ இதழின் முன்னாள் ஆசிரியர். ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆகிய நாளேடுகளில் பணியாற்றியதுடன், இங்கிலாந்து நாட்டின் ’ச்சீவினிங்’ ஸ்காலர்ஷிப் பெற்றவர். ‘பாலிவுட் இன்று’ என்ற புத்தகத்தையும், இந்திய திரைவானில் பெண்கள் என்ற தலைப்பில் இரண்டு நெடும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) மகளிர் முன்னேற்றத்திற்கான அமைப்பின் உறுப்பினராக உள்ள இவர், பல்வேறு ஊடக மற்றும் தொழில்துறை அரங்குகளில் உரையாற்றி வருபவர்.
அறிவியல் வெறுப்பு என்னும் அவலம்: கலிலியோ முதல் ட்ரம்ப் வரை
ஒரு பெருந்தொற்று உலகையே சூறையாடிவரும் வேளையில், மற்றுமொரு தொற்று நோய் வரலாறு நெடுகிலும் விடாமல் தொடர்ந்து வருகிற அவலம் இன்றளவும் தொடர்கிறது. அறிவியல் மறுப்பென்னும் சாபக்கேடுதான் அந்தப் பெரு வியாதி. மதத் தலைவர்கள் முதல், நாட்டை ஆள்வோர் வரை இதனால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரிசையில் இணைந்துள்ள இன்றைய தலைவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிருமி நாசினியை நேரடியாக ஊசி மூலம் கரோனா நோயாளிகளுக்குச் செலுத்தினால் வைரஸை ஒழித்துவிடலாமே என்று அண்மையில் அவர் தெரிவித்த கருத்து பலரின் புருவங்களை உயர்த்தியது.
அறிவியலில் வியத்தகு சாதனைகள் நிகழ்த்திய அமெரிக்க நாட்டின் அதிபர் அல்லவா! இந்த பொன்னான கருத்தை தெரிவித்ததன் மூலம், அறிவியல் மறுப்பாளர்களின் நீண்ட வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார். இவ்வாறு விஞ்ஞானத்தை மறுதலிப்பவர்களின் வரலாறு நீண்டு நெடியது, நவீன அறிவியலின் தந்தையான கலிலியோ-வின் காலத்திலேயே தொடங்கிவிட்டது.
சூரியனும் பிற கோள்களும் பூமியை சுற்றிவரவில்லை, மாறாக பூமியும் ஏனைய கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன என்று கண்டறிந்தார். இந்த சூரிய மையக் கோட்பாடு, பைபிளில் கூறப்படுவதற்கு எதிராக உள்ளது என்று குற்றம் சுமத்தி, அன்றைய ரோமன் கத்தோலிக்க திருச்சபை கலிலியோ-வை சிறையில் அடைத்தது. கலிலியோ-வின் வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்தாற் போல உணர்த்துவது ஒன்றே: ‘கருத்து சுதந்திரம்’, என்று கூறுகிறார் இஸ்ரேலி-அமெரிக்க வான்-இயற்பியல் பேராசிரியர் மரியோ லிவியோ.
“இன்று, பல அரசுகளின் அறிவியலுக்கு நேரெதிரான போக்கு, உலகில் விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் இடையே எழும் தேவையற்ற முரண்கள், இலக்கியத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள பிளவு அதிகரித்து வரும் சூழலில், கலிலியோ-வின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கருத்துச் சுதந்திரத்தின் இன்றியாமையை அது வலியுறுத்துகிறது,” என்று, ‘கலிலியோவும் அறிவியல் மறுப்பாளர்களும்’ என்ற தமது புதிய நூலில் அவர் தெரிவிக்கிறார்.
சாக்கடையில் குதித்தாலும் கவலையில்லை: பிரேசிலின் போல்சானரோ:
கரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவும் இந்த வேளையிலும், அறிவியல் மறுப்பு என்னும் பெருந்தொற்றும் அதற்கு இணையாக கட்டுக்கடங்காமல் உள்ளது கவலை தருவதாகும். இந்நிலையில், பிரேசில் நாட்டு அதிபர் ஜைர் போல்சானரோ, தான் அமெரிக்காவின் ட்ரம்ப்-க்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என நிறுவிவருகிறார்.
கரோனா ஒரு உலகப் பெருந்தொற்று எல்லாம் அல்ல, அது மிகைப்படுத்தப்பட்ட மிக சாதாரன ‘ஃப்ளூ’ மற்றும் ’சளி’ தொல்லைதான், என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். மேலும், கழிவு நீர் சாக்கடையிலேயே குதித்து எழுந்தாலும் பிரேசிலியர்களுக்கு எந்த வித தொற்றும் வராது. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அவர்கள் முன்னமே பெற்றுள்ளதால், அவர்களை அண்டவே அண்டாது, என்றார்.
இதற்கு முன்னர், காடுகள் அழிவதை எடுத்துக் கூறிய தமது நாட்டின் விண்வெளி அமைப்பின் தலைவரை ’பொய் சொல்வதாக’ குற்றம் சுமத்தி பதவி நீக்கம் செய்தார். வெப்பமண்டல நாடுகளின் ட்ரம்ப் என்று போல்சானரோ அழைக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை.
அறியாமையின் மயக்கம்: இங்கிலாந்து
இங்கிலாந்தில் உள்ள நிலைமை நம்பிக்கை தருவதாக இல்லை. அங்கு, பிரதமர் போரிஸ் ஜான்சன், கரோனா வைரஸ் பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே, ஐந்து முக்கிய அமைச்சரவை கூட்டங்களைத் தவிர்த்துவிட்டார். புவி வெப்பமயமாதல் குறித்து, அவரது ஐயப்பாடுகள் வெளிப்படையாக தெரியும் நிலையில், இந்த பெருந்தொற்று தொடர்பான அவரது அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
புவி வெப்பமயமாதல் ஆதாரபூர்வமற்ற ஒன்று என்னும் நிலைப்பாடு உடையவர் அவர். ஜான்சனின் 2019 தேர்தல் பரப்புரைக்கு, பருவநிலை மாற்றத்தை மறுக்கும் குழுக்கள் பெருமளவு நிதியை அள்ளிக் கொடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, பிரதமராக அவரது செயல்பாடு வேறு எப்படி இருக்கமுடியும்? இந்த வரிசையில் அடுத்து வருவது கம்போடிய பிரதமர் – தென்கிழக்காசிய நாட்டின் முடிசூடா மன்னன் – ஹுன் சென் மற்றும் மெக்ஸிக்கோ அதிபர் ஆந்த்ரே ஓப்ரடார்.
1990-கள் முதல் பிரதமராக உள்ள ஹுன் சென் கரோனாவில் இருந்து தங்களை பாதுகாக்க, கம்போடிய மக்கள் முகக்கவசம் அணிவதை கேலிசெய்கிறார். இதற்கும் மேலே சென்று, பாலியல் ஒழுக்கம் போதிக்கிறார் மெக்ஸிக்கோ அதிபர். அவரது ’உறுதியான அறவொழுக்கம்’ பெருந்தொற்று தாக்காமல் காக்கும் என்று மார்தட்டுகிறார் அவர்.
கலிலியோ: நம் தலைமுறைக்கு ஒரு பாடம்
இத்தகைய பகுத்தறிவு மறுப்பு வரலாற்றில் ஒன்றும் புதியதல்ல, கலிலியோ (1564-1642) காலத்திலேயே வந்துவிட்டது, என்று தமது நூலில் கூறுகிறார் லிவியோ. “இன்று நாம் சந்தித்துவரும் அறிவியலுக்கு எதிரான வெறுப்பும் பகைமையும், கலிலியோ எதிர்கொண்டு போராடிய அதே சிந்தனைப் போக்கும் உலவியல் களமும்தான்.
புனித நூலுக்கு விளக்கம் அளிப்பதில் இருந்து அறிவியலை வேறுபடுத்த அவர் மேற்கொண்ட தளரா முயற்சிகளும், இயற்கையின் விதிகளை, ஒரு கருத்தை நிறுவும் காரணத்துடன் முன் முடிவுகளோடு அணுகாமல், ஆய்வு முடிவுகள் தரும் அடிப்படையில் உறுதிசெய்வதும்,” அவர் காட்டிய வழி.