மத்தியப் பிரதேச மாநிலம், இரத்லாமில் வசிக்கும் மருத்துவர் லீலா ஜோஷி. இவருக்கு அப்பகுதி மக்கள் சூட்டிய பெயர், 'மால்வாவின் அன்னை தெரசா'. அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட இந்த மருத்துவர், அந்த வட்டாரத்தில் வசிக்கும் பழங்குடியினரின் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு (ரத்த சோகை) ரத்தப் பற்றாக்குறை பிரச்னைக்கு இலவசமாக சிகிச்சையளித்து மக்களிடம் விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொண்டுவருகிறார்.
ரத்த சோகைக்கு எதிரான அவரது வெற்றிகரமான சமூக செயல்பாட்டை அங்கீகரிக்கும்வகையில் அவருக்கு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்க இந்திய அரசு முடிவுசெய்தது.
லீலா ஜோஷி நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்ட அவர், அனைவரும் நலத்துடன் இருப்பதற்கான மிக முக்கியமான விவரத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
நலவாழ்வுத் துறைக்கு இணையற்ற பங்களிப்பு
1997ஆம் ஆண்டில் மருத்துவர் லீலா ஜோஷிக்கு அன்னை தெரசாவைச் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அச்சந்திப்பின் தாக்கத்தால் மருத்துவர் லீலா, பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கும் பெண்களில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு முகாம்களை நடத்தினார். மருத்துவர் லீலாவின் அயராத முயற்சிகள், ஒப்பிடமுடியாத பங்களிப்பு ஆகியவற்றால், அவர், 2015ஆம் ஆண்டில், பெண்கள், குழந்தைகள் நலத் துறை வெளியிட்ட 'செல்வாக்குமிக்க 100 பெண் புள்ளிகள்' பட்டியலில் இடம்பிடித்தார். அதைத் தொடர்ந்து, இப்போது அவருக்கு 2020ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.